சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை கடுமையாகப் பாதிக்கும்.
மாணவர் சேர்க்கை வீழ்ச்சி
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு காரணமே போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததுதான்.
இதனால் மாணவர் சேர்க்கை வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. நடப்பாண்டில் கூட அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஒன்றரை லட்சம் புதிய மாணவ, மாணவிகளை சேர்க்க முடியவில்லை.
சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசுப் பள்ளிகளால்தான் முடியும். அந்த ஒற்றை இலக்கை அடைவதற்காகவாவது அரசுப் பள்ளிகள் வலிமையுடன் திகழ வேண்டும்.
அதற்காக அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
இறால் பண்ணை, வேதித் தொழிற்சாலைகளில் அவசர ஆய்வு நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்
திமுக தயவால் தான் தவெக ஆட்சி நடக்குது: முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை – அதிர்ந்த சட்டசபை..
ரூ.634 கோடி லஞ்ச முறைகேடு வழக்கு: கே.என். நேரு மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு -சிக்கலில் திமுக