சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க முதல்வர் தலைமையில் புதிய உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்கவும், தடுப்புச் சட்டம் திறம்பட அமல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவை அரசு மறுசீரமைத்துள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக தமிழக முதல்வர் செயல்படுவார். அமைச்சர்கள் மரிய வில்சன், வன்னியரசு, ராஜ்மோகன், பி.விஸ்வநாதன் உட்பட 7 அமைச்சர்கள், திருமாவளவன், சசிகாந்த் செந்தில், தனபால் உட்பட 8 எம்பிக்கள் மற்றும் 37 எம்எல்ஏக்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலாளர், குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த உயர்நிலை கண்காணிப்பு குழு முக்கிய பங்காற்றும். இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Stories
ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் திறப்பு விழாவுக்கு தயாராகும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மையம்
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க தடை இல்லை: உயர் நீதிமன்றம்
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு