நவீன வகுப்பறைகளில் செய்யறிவை வெறும் தேடுபொறியாகப் பயன்படுத்தாமல், கற்பித்தலையும் கற்றலையும் மேம்படுத்தும் வழிகாட்டியாக மாற்றும் பணியை SchoolAI செய்துவருகிறது.
ஒரு வகுப்பறையில் 40 முதல் 60 மாணவர்கள் இருக்கும்போது, ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட கற்றல் திறனுக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப கற்பிப்பது ஆசிரியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். பாடத்திட்டங்களைத் தயாரிப்பது, வினாத்தாள்களை உருவாக்குவது, ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என ஆசிரியர்களின் பெரும்பான்மையான நேரம் நிர்வாகப் பணிகளிலேயே செலவாகிவிடுகிறது. இந்தச் சூழலில் நவீனமான தீர்வை முன்வைக்கிறது ‘SchoolAI’ என்னும் செய்யறிவுக் கற்றல் தளம்.
இத்தளம் சாதாரண செய்யறிவு உரையாடல் கருவிகளைப் போலக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில்களை மட்டும் வழங்கிவிட்டு நின்றுவிடுவதில்லை. மாறாக, வகுப்பறைச் சூழலுக்கு ஏற்றவாறு பாதுகாப்பான, உரையாடும் அனுபவத்தை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்குகிறது. பாதுகாப்பான செய்யறிவுக் கற்றல் இடம் – ‘Spaces’.
ஆசிரியர்கள் இதில் ‘Space’ எனும் மெய்நிகர் கற்றல் சூழலை உருவாக்க முடியும். அதில், ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்’, ‘அப்துல் கலாம்’ போன்ற வரலாற்று நாயகர்களோடு நேரடியாக உரையாடுவது போன்ற அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்கும் வசதியுள்ளது. மேலும், அந்த அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு அவர்களே விளக்கம் தருவதுபோன்ற அனுபவத்தையும் தர முடியும். சிக்கலான அறிவியல், கணிதக் கருத்துகளை எளிய கதைகள் வாயிலாக மாணவர்களுக்கு விளக்கவும் இந்தத் தளம் உதவுகிறது.
ஆசிரியர்களுக்கான செய்யறிவுக் கருவிகள் – ‘Tools’
ஆசிரியர்களின் அன்றாடப் பணிகளை எளிதாக்க ‘Tools’ எனும் சிறப்புப் பகுதி இதில் உள்ளது. பாடக்குறிப்புகளைத் தயாரித்தல், மாணவர்களின் பல்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ப வினாத்தாள்களை மாற்றியமைத்தல், பாடத்தைப் புரிந்துகொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்குச் சிறப்புக் கற்பித்தல் முறைகளைப் பரிந்துரைத்தல் போன்ற பணிகளை இந்தக் கருவிகளின் துணையுடன் நொடிகளில் செய்து முடிக்கலாம்.
கதாபாத்திரங்கள் வழியே கற்றல் – ‘Roleplay Assistants’
வகுப்பறையில் பாடங்களைச் சலிப்பின்றி சுவாரசியமாக மாற்ற, மாணவர்கள் வரலாற்று நாயகர்களுடனோ துறை சார்ந்த வல்லுநர்களுடனோ உரையாடும் ‘Roleplay’ முறையும் இந்தத் தளத்தில் உள்ளது. இதன் மூலம், மனப்பாடத் திறனை வளர்த்துக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், சிந்தித்துக் கேள்வி கேட்கும் திறனையும் மாணவர்கள் பெற வாய்ப்புக் கிடைக்கிறது.
நேரலை கண்காணிப்பும் மாணவர் பாதுகாப்பும்
பள்ளிகளில் செய்யறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது மாணவர்களின் தரவைப் பாதுகாப்பது மிக அவசியம். ‘SchoolAI’ தளத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து உரையாடல்களையும் ஆசிரியர்கள் நேரலையில் கண்காணிக்க முடியும். மாணவர்கள் ஏதேனும் தவறான தகவல்களைத் தேடினாலோ, பாடத்தை விட்டுத் திசைமாறிச் சென்றாலோ ஆசிரியருக்கு உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பு (Alert) சென்றுவிடும். இதன் மூலம், முறையான வழியில் மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடர்ந்து இலக்கை அடைய முடிகிறது.
நவீன வகுப்பறைகளில் கற்பித்தலையும் கற்றலையும் மேம்படுத்தும் பாதுகாப்பான வழிகாட்டியாக செய்யறிவை மாற்றுவதில் ‘SchoolAI’ இன்றியமையாத பங்கை வகிக்கிறது.
யாருக்கு இது மிகவும் பயன்படும்?
ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து, மாணவர்களுடன் அவர்கள் நேரடியாகச் செலவிடும் தரமான நேரத்தை அதிகரிப்பதைத் தனது முதன்மை நோக்கமாகக் கொண்டிருக்கும் SchoolAI தளம் ஆசிரியர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் (Special Educators), மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துத் தரப்புக்கும் ஏற்ற செய்யறிவுத் தோழனாக விளங்குகிறது. https://app.schoolai.com/discover

More Stories
Tecno Spark Go 3 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வு தகவலுக்கு இஸ்ரோ மறுப்பு