July 29, 2026

“இதுதான் ஊழலற்ற, வெளிப்படையான த.வெ.க. ஆட்சியின் லட்சணமா?” – டி.டி.வி.தினகரன் கேள்வி

சென்னை: பதினைந்து லட்சம் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் அரசு வழக்கறிஞர் பணி நியமன ஆணையா ? – இது தான் ஊழலற்ற, வெளிப்படையான தவெக ஆட்சியின் லட்சணமா ? என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் பத்து நாட்களில் பணிநியமனம் வழங்கப்படும் என கூறும் தொலைப்பேசி உரையாடல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவர் அரசு வழக்கறிஞராக நியமனம், மூத்த அமைச்சர் ஒருவர் அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் கேட்பதாக வழக்கு தொடர்ந்த தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் என அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான தொடர் புகாரில் தற்போது கன்னியாகுமரி மாவட்ட தவெக நிர்வாகி ஒருவரும் சிக்கியிருக்கிறார். யாராவது லஞ்சம் கேட்டால் “விஜய் ஆட்சி என்றும், கொடுக்க முடியாது எனவும் துணிச்சலுடன் சொல்லுங்கள்” என பொதுமக்கள் மத்தியில் முழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய், தற்போது தன்னுடைய சொந்தக் கட்சி நிர்வாகிகளே லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாக எழுந்திருக்கும் புகாருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ?

முதலமைச்சரின் அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா? தவெக நிர்வாகிகளுக்குப் பொருந்தாதா? தகுதி மற்றும் திறமையை அடிப்படையாக வைத்து நடக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் நியமனம், தவெக ஆட்சிக்கு வந்த பின்பு லஞ்சமாக பணம் கொடுத்தாலே நடக்கும் என்ற நிலை உருவாகியிருப்பது, சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதான பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ஒட்டுமொத்தாக சீர்குலைக்கும் செயலாகும். எனவே, நீதித்துறையுடன் நேரடி தொடர்புடைய, முக்கிய பொறுப்புகளில் ஒன்றான அரசு வழக்கறிஞர் நியமனத்தில் எழுந்திருக்கும் லஞ்சப் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்திடுவதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Spread the love