May 8, 2026

இந்தியா – யுஏஇ இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்​தி​யா​வுடன் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள – ஐக்​கிய அரபு அமீரகம் மும்​முர​மாக செயல்​பட்டு வரு​கிறது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக மற்​றும் பாது​காப்பு உறவு​கள் மேம்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஐக்​கிய அரபு அமீரகம் (யுஏஇ) இந்​தி​யா​வுடன் நெருங்​கிய நட்பு நாடாக இருப்​ப​தோடு, இந்​தி​யா​வின் எரிசக்தி தேவையை நிறைவேற்​றும் முதல் 5 நாடு​களில் ஒன்​றாக​வும் உள்​ளது. ஈரான்​- அமெரிக்​கப் போர் தொடங்​கிய​தில் இருந்​து, 500-க்​கும் மேற்​பட்ட ஏவு​கணை​கள், 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ட்ரோன்​களை யுஏஇ மீது ஈரான் ஏவி தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது.

ஹார்​முஸ் ஜலசந்தி முடங்​கி​யுள்ள நிலை​யில், இதற்கு வெளியே இருக்​கும் யுஏஇ-யின் ஃபுஜை​ரா, கோர் ஃபக்​கன் ஆகிய துறை​முகங்​கள் உலகளா​விய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்​யும் மையங்​களாக உள்​ளன. இதனால் இவற்றை குறி​வைத்து ஈரான் தாக்​குதல் நடத்​துகிறது. மத்​திய கிழக்​கின் பொருளா​தார வளர்ச்சியின் மையமாக யுஏஇ திகழ்​வ​தால், இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்தி​யதை​விட அதி​களவி​லான ஏவு​கணை​களை அமீரகம் மீது ஈரான் ஏவி வரு​கிறது.

சவுதி அரேபி​யா​வும் கத்​தா​ரும் பாகிஸ்​தானுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டுள்​ளன. இதே​போன்ற பாது​காப்பு ஒப்​பந்​தத்தை இந்​தி​யா​வுடன் மேற்​கொள்ள யுஏஇ விரும்​பு​கிறது. அதன் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் கடந்த ஜனவரி மாதம் இந்​தியா வந்​த​போது, பாது​காப்பு மற்றும் வர்த்தக ஒப்​பந்​தம் செய்​வதற்​கான விருப்ப கடிதத்​தில் கையெழுத்​திட்​டார்.

6 மாதங்​களுக்​குள் பாது​காப்பு கூட்​டாண்மை ஒப்​பந்தம் செய்ய இரு நாடு​களும் திட்ட​மிட்​டுள்​ளன. இதற்​கான பணி​கள் மும்முரமாக நடை​பெற்று வரு​கின்​றன. மேலும், பிரதமர் மோடி வரும் 18ம் தேதி நெதர்​லாந்து செல்​லும் வழி​யில் அபு​தாபி செல்ல திட்​ட​மிட்​டுள்​ளார். அப்​போது முந்​ரா- ஃபுஜை​ரா- அ​காபா புதிய வர்த்தக தொடர்பை ஏற்​படுத்​து​வதற்​கான ஒப்​பந்​தம் நிறைவேறும் என கூறப்​படு​கிறது.

ஜோர்​டானின் பாஸ்​பேட் மற்​றும் பொட்​டாஷ் சுரங்​கங்​களைச் செங்​கடலில் உள்ள அகாபா துறை​முகத்​துடன் இணைக்க 360 கி.மீ நீள ரயில் பாதையை அமைக்க 2.3 பில்​லியன் டாலர் மதிப்​பிலான ஒப்​பந்​தத்தை அமீரகம் கடந்த மாதம் இறுதி செய்​தது. பாஸ்​பேட் மற்​றும் பொட்​டாஷ் ஆகிய இரண்​டும் இந்​தி​யா​வின் உரத் தயாரிப்​பிற்கு மிக முக்​கிய​மானவை. இந்​தியா- அமீரகம் இடையே​யான பாது​காப்பு மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தங்​கள் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுப்​படும் என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

Spread the love