மாஸ்கோ: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா நேற்று வெற்றிகரமாக அனுப்பியது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகியவை இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இந்த விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன், ரஷ்யாவின் சோயூஸ் விண்கலங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு செய்கின்றனர். பொதுவாக 6 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் மாற்றப்படுவது வழக்கம். இதன்படி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தை சேர்ந்த அனில் மேனன், ரஷ்ய விண்வெளி வீரர்கள் பியோட்டர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோர் நேற்று இரவு சோயூஸ் எம்எஸ்-29 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர்.
கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இவர்களின் விண்கலம் நேற்று இரவு 7.47 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8.17 மணி) புறப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனனுக்கு இது முதல் விண்வெளிப்பயணமாகும். விண்கலம் புறப்படுவதற்கு முன் அனில் மேனன் எக்ஸ் தளத்தில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
அவர் தனது பதிவில், “கஜகஸ்தானில் இருந்து சோயூஸ் எம்எஸ்-29 விண்கலம் மூலம் விண்வெளிக்குச் செல்வதிலும், நாசா மற்றும் எக்ஸ்பெடிஷன் 74/75-க்கு ஆதரவாக 8 மாத காலப் பணியை தொடங்குவதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாசா, நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களுக்கு எனது நன்றி. நாளை விடியப்போகும் நாளுக்காக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

More Stories
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மோதல்: பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்
ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு