February 18, 2026

இன்னும் எத்தனைக் காலம்தான் ஷமியை ஒதுக்கி வைக்க முடியும்? – பயிற்சியாளர் வேதனை

இன்னும் எத்தனைக் காலம்தான் ஷமியை ஒதுக்கி வைக்க முடியும்? - பயிற்சியாளர் வேதனை

ஆர்.முத்துக்குமார்

தற்போதைய பிசிசிஐ ஆட்சி அதிகார கொள்கைகளின் அடிப்படை என்ன? என்ற கேள்விகள் எழுமாறு முகமது ஷமியையும் சர்பராஸ் கானையும் பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ததும் தொடர்ந்து ஷமி தன் உடல் தகுதியை நிரூபிக்குமாறு பயங்கரமாக வீசி வருவதும், ரஞ்சி அரையிறுதியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும், ‘இன்னும் எத்தனைக் காலம்தான் ஷமியை அணியிலிருந்து ஒதுக்கி வைக்கப் போகிறீர்கள்?- என்ற கேள்வியை ஷமியின் நீண்ட கால பயிற்சியாளர் பத்ருதீன் சித்திக்கியை எழுப்ப வைத்துள்ளது.

ஷமி எந்த வடிவத்திலும் கொண்டு வர முடியாத படிக்கு கவுதம் கம்பீர் மற்றும் நடப்பு பிசிசிஐ அதிகார மட்டங்களின் கொள்கைகள் கிரிக்கெட்டைத் தாண்டியது அதனால்தான் இப்போதைக்கு ஷமியைக் கடந்து யோசிக்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.

ஹர்ஷித் ராணாவை அவரது திறமைக்கு மீறி உருவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். எந்த வடிவத்திலும் ஷமியும் சர்பராஸ் கானும் இடம்பெறவில்லை என்றால் அதற்கு நிச்சயம் கிரிக்கெட் காரணங்கள் இருக்கவே முடியாது என்பதுதான் உறுதியாகிறது. ஷமியின் நீண்ட கால பயிற்சியாளர் சித்திக்கியும் “ஷமியை அவர்கள் மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, “இது நிச்சயம் ஷமிக்குக் கஷ்டமாகவே இருக்கும், எனக்குமே கஷ்டமாகத்தான் இருக்கிறது. நன்றாக பந்து வீசி உடல் தகுதியை பரமாரித்து வந்தாலும் அவரை அணியில் எடுக்க மறுக்கின்றனர்.

இப்போது என்ன ஆயிற்று அவர் மீண்டும் மீண்டும் நன்றாக ஆடி காத்திருக்க வேண்டியதுதான். இதைத்தவிர நான் வேறு என்ன கூற முடியும்? இப்போது கூட 20 ஓவர்களுக்கும் மேல் வீசி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எனவே உடல்தகுதி பிரச்சனையில்லை.

மேலும் முகமது ஷமியை விட சிறந்த பவுலர் இப்போது இந்திய அணியில் இல்லை. அவருக்குப் பதிலாக சிறந்த மாற்று வீச்சாளர் கிடைத்து விட்டார் என்றால் ஷமியைப் புறக்கணிப்பதை புரிந்து கொள்கிறேன். உள்நாட்டுத் தொடர்களில் தோல்வி மேல் தோல்வி அடைந்தும் ஷமியை உட்காரவைக்கின்றனர். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்திடம் டெஸ்ட் தொடர்களை இழந்தும் ஷமியின் அவசியம் அவர்களுக்குப் புரியவில்லை.

தொடர்ந்து சிறப்பாக ஆடு என்று நான் அவரிடம் கூறி வருகிறேன். எத்தனை காலம் அவரைப் புறக்கணிக்க முடியும்?” என்று உண்மையான வேதனையுடன் கூறியுள்ளார் பத்ருதீன் சித்திக்கி.

அணியில் எடுக்காமல் அவர் தொடர்ந்து ரஞ்சி, உள்ளிட்ட உள்நாட்டுப் போட்டிகளில் முழு முயற்சியுடன் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்ற கடின உழைப்பைப்போட்டு இந்த நடைமுறையில் மீண்டும் காயமடைவதுதான் நடக்கும், அப்போது அணித்தேர்வுக்குழுவினர் சொல்வார்கள், எடுக்கலாம்தான் பார்த்தோம் ஆனால் அவர் உடல்தகுதிதான் பிரச்சினை என்பார்கள். ஆனால் நமக்கென்னவோ காரணம் புரியவே செய்கிறது.

Spread the love