Follow Us
புதுடெல்லி: ஈரானிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் குஜராத் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியா – ஈரான் இடையிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் மீண்டும் உயிர் பெறத் தொடங்கியுள்ளது. சுமார் 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் ஈரானிலிருந்து புறப்பட்ட கப்பல் ஒன்று நாளை மறுநாள் அதாவது வரும் 4-ம் தேதி குஜராத் துறைமுகத்திற்கு வரவுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையிலான எண்ணெய் வர்த்தக உறவு தற்காலிகமாகப் புதுப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரானின் கார்க் தீவிலிருந்து ‘பிங் ஷுன்’ என்ற கப்பல் குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கச்சா எண்ணெயை வாங்குவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லை. எனினும், வாடினார் பகுதியில் ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் நயாரா எனர்ஜி சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும், இங்கிருந்துதான் மத்தியப் பிரதேசத்தின் பினா பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது. சந்தைக் கணிப்பு நிறுவனமான ‘கெப்லர்’ தரவுகளின்படி, இந்தக் கப்பலின் இறுதி இலக்கு குஜராத் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சர்வதேசத் தடையில் உள்ள எண்ணெயைக் கொண்டு வரும் கப்பல்கள், பிடிபடாமல் இருக்கப் பயணத்தின் பாதியிலேயே தங்கள் இலக்கை மாற்றிக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளதால், இதில் கூடுதல் கவனம் தேவைப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்த கடும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, இந்தியா ஈரான் எண்ணெயை வாங்குவதை நிறுத்தியிருந்தது.
தற்போது ஈரான் – அமெரிக்கப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தித் தட்டுப்பாட்டைப் போக்க, ஏற்கெனவே ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு மட்டும் அமெரிக்கா ஏப்ரல் 19 வரை 30 நாள் அவகாசம் வழங்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்தியா இந்த கச்சா எண்ணெயை வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

More Stories
‘‘ஈரான் போர் முடிவை நெருங்குகிறது’’ – நாட்டு மக்களுக்கு ட்ரம்ப் உரை
ஹார்முஸ் ஜலசந்தியில் 2,000 கப்பல்கள், 20,000 மாலுமிகள் அவதி – உணவு, குடிநீர் பற்றாக்குறையால் தவிப்பு
நேட்டோ அமைப்பில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிசீலனை