August 5, 2026

“ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” – ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு

வாஷிங்டன்: “மேற்காசியாவில் உள்ள நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் ஒரு ஒப்பந்தத்தை எட்ட அவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானில் உள்ள எண்ணெய் வளங்கள், மின்னணு நிலையங்கள் மீது சென்ற வார இறுதியில் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனால் மேற்காசியாவில் மோதல் தீவிரமடையும் சூழல் உருவானது. இந்நிலையில், அந்த தாக்குதல் திட்டம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரம்ப் உறுதி செய்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் உடனான பேச்சுவார்த்தை குறித்து விவரித்திருந்தார். ஈரானுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இந்த பேச்சுவார்த்தை மூலம் அவர்கள் தரப்பில் (போர் நிறுத்த) ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் சர்வ நாசத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தேன் என்றார்.

இந்த பேச்சுவார்த்தை மூலம் ஹார்முஸ் ஜலசந்தியின் தடையற்ற கப்பல் போக்குவரத்து, ஈரானின் வசம் உள்ள அணுசக்தி விவகாரம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும். பேச்சுவார்த்தையின் நிலை குறித்த விவரம் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்று ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் தங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை எதுவும் மேற்கொள்ளவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. ஆனால், இப்போது இரு தரப்பு பேச்சுவார்த்தை நடப்பதாக ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதன் எல்லையை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்துகிறது. எங்களுக்கு போரை விரிவுபடுத்த விரும்பவில்லை என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியுள்ளதாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. சுமார் மூன்று ட்ரோன்களை கொண்டு இந்த தாக்குதல் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Spread the love