மும்பை: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதுபோல இந்தியப் பங்குச் சந்தைகள் மார்ச் மாதத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. மார்ச் மாதம் தொடர்ந்து 5 வாரங்களாக சரிவை எதிர்கொண்ட பங்குச் சந்தை, முதலீட்டாளர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு மார்ச் மாதத்தில் ரூ.463 லட்சம் கோடியில் இருந்து ரூ.412 லட்சம் கோடியாகச் சரிந்துள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு ரூ.51 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.
இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான மிகப்பெரிய எப்ஐஐ வெளியேற்றமாகும். ஏப்ரல் மாத நிலவரம்? அதிர்ச்சி தரும் மோசமான செய்திகள் அனைத்தும் ஏற்கெனவே சந்தையில் எதிரொலித்துவிட்டதால், இனி வரும் நாட்களில் சந்தை மேலும் சரியாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளது. எனினும், சந்தையில் உடனடி ஏற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தணிந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினால் மட்டுமே சந்தையில் சாதகமான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வரத்து, நிறுவனங்களின் லாப விகிதம் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஏப்ரல் மாதத்தின் நகர்வுகள் அமையும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More Stories
‘துணிச்சல் இருந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் பெட்ரோல் எடுக்கலாம்’ – ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் ஆலோசனை
வலுக்கும் எரிபொருள் தட்டுப்பாடு – பிலிப்பைன்ஸில் தேசிய அவரச நிலை பிரகடனம்!
அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்