August 18, 2026

ஈரோடு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம்

ஈரோடு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த இரு மாதமாக கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளதால், ஈரோடு மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, பவானி, தாண்டாம்பாளையம், சிவகிரி, கவுந்தப்பாடி, விஜயமங்கலம், அவல்பூந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் 190 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களால், பெட்ஷீட், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், துண்டு ரகங்கள், வீட்டு உபயோக துணி வகைகள், மேட் ரகங்கள், ஜமக்காளம் என ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக சென்னிமலை மற்றும் ஈரோடு பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் பிரதம சங்கங்களுக்கு உற்பத்தி இலக்கு கொடுத்துள்ளனர்.

பிரதம கைத்தறி சங்கங்களும் நூல் கொடுத்து நெசவு செய்து வரும் நிலையில் கடந்த இரு மாதங்களாக ஜவுளி கொள்முதலை திடீரென நிறுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன.

கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று உற்பத்தி செய்து வைத்துள்ள ஜவுளிகளை கொள்முதல் செய்யாமல் இருந்தால், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை ஏற்படும். கூட்டுறவு சங்கத்தை நம்பி வாழும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பெட்ஷீட், போர்வை ரகங்கள், மேட், ஜமக்காளம் கொள்முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னிமலை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பெட்ஷீட், போர்வைகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய சென்னிமலை, சென்டெக்ஸ் கைத்தறி சங்க நிறுவனர் நாச்சிமுத்து என்பவரால் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அதில் 1952-ம் ஆண்டு முதல் தலைவராக 17 ஆண்டுகள் பணியாற்றி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை உயர்த்தினார்.

சென்னிமலை மற்றும் ஈரோடு மாவட்ட கைத்தறி சங்கங்களின் அதிக அளவு பங்களிப்புடன் உருவான கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஈரோடு மாவட்ட பெட்ஷீட், போர்வை விற்பனையை நிறுத்தினால் கைத்தறி நெசவாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து பெரிதும் பாதிப்படுவார்கள். நிறுத்தி வைத்துள்ள கோ-ஆப்டெக்ஸ் கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்தபோது ‘‘கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரி, கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் என்றால் சேலை மட்டும் விற்பனை செய்யும் கடை என தவறான புரிதலுடன் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார். இதன் காரணமாக கடந்த இரு மாதங்களாக மற்ற ஜவுளி பொருட்கள் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

Spread the love