April 27, 2026

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த ஜன.1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே அமலில் இருந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரியும் அரசு ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்ற அரசு உதவி பெறும் ஆங்கிலோ – இந்தியன் பள்ளி ஆசிரியையான திருவான்மியூரைச் சேர்ந்த ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கடந்த 2005-ம் ஆண்டு பணி யில் சேர்ந்து 2017-ல் விருப்ப ஓய்வு பெற்றும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இன்னும் எனக்குரிய ஓய்வூதியப் பணப் பலன்கள் வழங்கப்பட வில்லை. இதற்காக ஓய்வூதிய பணப்பலன்கள் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்நிலையில் தமிழக அரசு பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடையுடன் சேர்த்து, கடைசி மாதம் பெறும் ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறும் வகையில் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை 2026 ஜன.1-ம் தேதி முதல் அறிமுகம் செய்து, அரசாணையும் பிறப்பித்துள்ளது. மேலும், 2025 டிச.31-ம் தேதிக்கு முன்பாக பணி ஓய்வுபெற்றவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் என்னைப் போன்றோர் தொடர் ஓய்வூதியம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பங்களிப்புத் தொகை செலுத்தாத அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக மாதாந்திர ஓய்வூதியம் பெற முடியும் என்றால், ஓய்வூதிய திட்டத்துக்காக தங்களது பங்களிப்புத் தொகையை செலுத்தி ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர் ஓய்வூதியம் பெற அனைத்து உரிமைகளும் உள்ளது. அரசின் நிதிச்சுமையை குறைப்பதற்காகவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதற்கு எதிர்மறையாக இப்போது செயல்படக்கூடாது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் ரூ.73 ஆயிரம் கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் கூறி யுள்ள நிலையில், அந்த தொகை வட்டியுடன் சேர்ந் துள்ளதால், 2025 டிச.31-ம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் தொடர் ஓய்வூதியம் வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு இதுநாள் வரை எந்தவொரு விதிகளும் வகுக்கப்படவில்லை என்பதால், எனக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப்படியுடன் சேர்த்து மாதாந்திர ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இது தொடர்பாக தமிழக அரசு மார்ச் 26-க்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

Spread the love