October 14, 2026

உ.பி. தேர்தலில் போட்டியிடத் தயாராகும் அரசியல் வாரிசுகள்

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்களின் வாரிசுகள் போட்டியிடத் தயாராகின்றனர். இவர்கள் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிட முயல்கின்றனர்.

உ.பி.யின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் உள்ள அரசியல் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகி வருகின்றனர். இதன்மூலம், உ.பி.யின் அரசியல் களம் மீண்டும் ஒருமுறை அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கான நுழைவுவாயிலாக மாறவுள்ளது. இந்த இளம் வாரிசுகள், நாடாளுமன்றம் எம்.பி.க்கள் மற்றும் சட்டப்பேரவை எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினராகவும் உள்ளனர்.

இவர்கள் மட்டுமல்லாமல், மறைந்த கட்சித் தலைவர்களின் குடும்பத்தினரும் தங்கள் அரசியல் வாரிசுரிமையைக் கோரி வருகின்றனர்.

இவர்கள் அனைவருமே செல்வாக்குமிக்க அரசியல் குடும்பங்களின் அடுத்த தலைமுறையினர் ஆவர். இதற்காக, இந்த புதிய இளம் தலைவர்கள் தங்கள் பகுதி மக்களுடன் தொடர்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை சமூகவலைதளங்களிலும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும் உ.பி.யின் முன்னாள் முதல்வருமான ராஜ்நாத் சிங்கின் மூத்த மகன் பங்கஜ் சிங் பாஜக எம்எல்ஏவாக உள்ளார். இப்போது தனது இளைய மகன் நீரஜ் சிங்கை பாஜக சார்பில் போட்டியிட வைக்க ராஜ்நாத் முயல்கிறார். நீண்ட காலமாக பாஜகவில் செயல்படும் நீரஜ், சமீபத்தில் பாஜகவில் மாநிலத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதுவரை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தமுறை நீரஜுக்கு வாய்ப்பளிக்க பாஜக பரிசீலிக்கக்கூடும்.

அதேபோல், உ.பி. பேரவை சபாநாயகர் சதீஷ் மஹானாவும் 8 முறை எம்எல்ஏவாக இருந்தவர். இவரது மகன் கரண் மஹானா கட்சியில் தீவிரமாகச் செயல்படுவதோடு, மக்கள் தொடர்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவரும் பாஜகவில் வேட்பாளராக வாய்ப்பு தேடி வருகிறார். உ.பி. மாநில பாஜகவின் எம்.பி.யான ரீட்டா பகுகுணா ஜோஷியும் தனது மகன் மயாங்க் ஜோஷிக்கு வாய்ப்பு கோருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரை தன் கட்சியில் இழுத்து வேட்பாளராக்க சமாஜ்வாதி கட்சி விரும்புகிறது. ஏனெனில், உ.பி.யில் காங்கிரஸ் முதல்வராக இருந்தவர் ஹேமாவதி நந்தன் பகுகுணாவின் மகள் இந்த ரீட்டா ஆவார்.

அமேதியில், காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்த சஞ்சய் சிங், கடந்த 2019-ல் பாஜகவுக்குத் தாவினார். தற்போது பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். இவர் தனது வழக்கறிஞர் மகளைச் சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் அரசியலில் களமிறக்க முயற்சித்து வருகிறார்.

இதேபோல் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளும் உ.பி. தேர்தலில் வேட்பாளராக தீவிரமாக முயல்கின்றனர்.

அயோத்தி மக்களவை உறுப்பினர் அவ்தேஷ் பிரசாத்தின் மகன் அஜித் பிரசாத், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார். இவர், எம்எல்ஏவாக இருந்த தனது தந்தையின் ராஜினாமாவால் காலியான இடத்துக்காக இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். கடோஹத்தி தொகுதி சமாஜ்வாதி எம்பியான லால்ஜி வர்மா, தனது மகளும் மருத்துவருமான சாயாவை தேர்தலில் களமிறக்கத் தயாராகி வருகிறார்.

ஜோன்பூர் மாவட்டத்தின் கெராகாட் தொகுதி சமாஜ்வாதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் துஃபானி சரோஜ். இவரது மகள் பிரியா சரோஜ் சமாஜ்வாதி எம்.பி.யாக உள்ளார். பிரியா, சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். துஃபானி சரோஜ் இப்போது தனது மகன் தனஞ்செயையும் அரசியலில் ஈடுபடுத்த விரும்புகிறார்.

இந்த பட்டியலில் மறைந்த அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரும் உள்ளனர். உ.பி. சட்டப்பேரவையின் சமாஜ்வாதி எம்எல்ஏ மற்றும் மூத்த உறுப்பினரான ஆலம் பாடி, இந்த ஆண்டு ஜூலை மாதம் தனது 90-வது வயதில் காலமானார். அவரது நிஜாமாபாத் தொகுதியில் ஆலம்பாடியின் மகன் முஸ்தஜாப் ஆலம் போட்டியிட விரும்புகிறார். சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக இருந்த ராம் கோவிந்த் சவுத்ரியும் சமீபத்தில் காலமானார். அவரது மகன் ரஞ்சித் சவுத்ரி, தனது தந்தையின் பன்ஸ்திஹ் தொகுதியிலிருந்து போட்டியிட வாய்ப்பு கோருகிறார். ஆக்ராவின் ஃபதேஹாபாத் தொகுதி பாஜக எம்எல்ஏ சோட்டே லால் சமீபத்தில் காலமானார். அக்கட்சி அவரது மகன்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. இதுபோல், வாரிசுகள் பட்டியல் மேலும் நீள்கிறது.

Spread the love