
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு, கொத்தடிமை தொழிலாளர் மீட்பு பணியில் சிறப்பாகப் பணிபுரிந்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன் குமாருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2.56 கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கவும், தமிழகத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கவும், மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.
இதில், தொழிலாளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் கலந்துகொண்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து அமைச்சர் கணேசன் பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில், 944 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.2.56 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு துறைகளின் வாயிலாக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய சார்-ஆட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்களுக்கு கேடயமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் வீரராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 3 நாள் மிதமான பனிமூட்டம் நிலவ வாய்ப்பு
மதுரை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு ரூ.450 கோடி!
பல குடும்பங்களின் தலையெழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்