
சென்னை: ரூ.6078.40 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பேரூரில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்திதிறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமான பணிகளை பிப்.11ம் தேதி அன்று ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான குடிநீர், பூண்டி, சோழவரம், புழலேரி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய ஏரிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நெம்மேலியில் உள்ள 110, 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 1,230 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரின் நீண்ட கால குடிநீர்த் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடிவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையின் வளர்ச்சிக்கு ஏற்ப குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக தமிழக முதல்வர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி அன்று சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவியுடன் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையத்தின் கட்டுமான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு (Intake Structure), செதிலடுக்கு வடிகட்டி(Lamella Clarifier), சவ்வூடு வெளியேற்றும் தெளிந்த நீர் தொட்டி (RO Permeate Tank), நடுநிலைபடுத்தும் தொட்டி (Neutralization Pit), நீர்சேகரிப்பு தொட்டி (Product water tank), சுத்திகரிக்கப்பட்ட நீர்சேகரிப்பு தொட்டி (Clear water reservoir), கசடுகளை கெட்டிப்படுத்தும் தொட்டி (Sludge Thickener), நிர்வாகக் கட்டிடம் (Admin Building), பண்டக சாலை (Warehouse), சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் (Limestone Filter), எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம் (RO Building), எதிர்மறை சவ்வூடு பரவல் நீர்செலுத்தும் தொட்டி (RO Feed tank), காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி (Dissolved Air Flotation), புவி ஈர்ப்பு ஈரடுக்கு வடிகட்டி நிலையம் (Gravity Dual Media Filter), ரசாயன கட்டிடம் (Chemical Building), மின்சார கட்டிடம் (Electrical Building) மற்றும் தொழிற் கூடங்களுக்கான (Workshop) கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.
கடல்சார் பணிகளாக 2,500 மில்லி மீட்டர் விட்டமுள்ள HDPE குழாய்கள் கடல் படுக்கையின் அடியில் பதிக்கப்பட்டுள்ளது. இதில் 2 கடல் நீரை உட்கொணரும் குழாய்கள் 1,140 மீட்டர் மற்றும் 1,150 மீட்டர் நீளத்திற்கும், உவர் நீர் வெளியேறும் குழாய் 756 மீட்டர் நீளத்திற்கும் குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கடல் நீரை உட்கொணரும் கோபுர (Caisson) கட்டுமான பணிகள் நிறைவுற்று, கடலில் பதிக்கப்பட்ட குழாய்களின் இறுதி பகுதியில் இணைப்பதற்கான ஆயத்த பணிகள் நடைப்பெற்று வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நீரேற்று நிலையம் மற்றும் நீர்தேக்க தொட்டி கட்டமைப்பு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில், ஒரு பகுதியாக பேரூரில் இருந்து போரூர் வரை 59 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணியில், 2,000 / 1,800 விட்டம் உள்ள குழாய்கள் 19.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கொண்டுவரபட்டு, அதில் 4.1 கிலோ மீட்டர் குழாய்கள் பாதிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மண்டலம் 13 (அடையாறு) க்குட்பட்ட பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் நீரேற்ற நிலையங்களில் இருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு (24/7) தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர் கட்டமைப்பு விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப் பட்டுள்ளது. நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த திட்டத்தின் மூலம், பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியின் அருகாமையில் உள்ள 20 ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் உள்ள 22.67 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள். இவ்வாய்வின் போது, சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் கவ்ரவ் குமார், தலைமைப் பொறியாளர் ஜ.சுகந்தி, மேற்பார்வை பொறியாளர் இ.சாந்தி, செயற் பொறியாளர்கள் ஸ்.கிருபாகரவேல், ஜெ.வெங்கடேசன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை: தருமபுரி விவசாயிகள் வேதனை