April 21, 2026

கடைசி நாள் பரப்புரையில் பேச முடியாமல் கண் கலங்கிய செங்கோட்டையன்.. என்ன காரணம்?

அதிமுகவில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாகவே விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டு வந்தார். இந்நிலையில் பரப்புரையின் இறுதி நாளான இன்று விஜய் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார் செங்கோட்டையன்.

சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்ட பரப்புரைகளில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று மாலை ஆறு மணியுடன் பிரச்சாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வீடியோக்களையும் வேட்பாளர்கள் வெளியிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் ஒவ்வொருவரும் தங்களது இறுதிக்கட்ட பரப்புரையை நிறைவு செய்கின்றனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் தொகுதி பரப்புரையில் செங்கோட்டையன் கண் கலங்கி பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

தவெக செங்கோட்டையன்
இத்தனை ஆண்டு காலமாக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் செங்கோட்டையன். தற்போது முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக விசில் சின்னத்தில் கோபியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக அவர் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரச்சாரத்துக்கு கால அவகாசம் நிறைவு பெறவுள்ள நிலையில் தற்போது தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

  

இறுதிக்கட்ட பரப்புரையில் எமோஷனல் பேச்சு
அந்த வகையில் கோபிசெட்டிபாளையத்தில் பரப்புரையில் பேசிய செங்கோட்டையன், நான் வேலூரில் விஜயின் புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தேன். அதன்பிறகு இந்த படத்தை பார்த்த பிறகு, மறுநாள் என்னை வீட்டுக்கு அழைத்தார். அங்கு போனதும், நீங்க ஒரு சீனியர். ஜெயலலிதாவின் போட்டோவை தான் வைக்க வேண்டும். அவுங்க புகைப்படத்தை வைத்தால் தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொன்னார்.

அப்படி யாருமே சொல்ல மாட்டார்கள் என கூற வந்து பேச முடியாமல் கண் கலங்கி அழுது விட்டார் செங்கோட்டையன். இது சம்பந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அதிமுகவை விட்டு வெளியே போனாலும், உங்களுக்கு ஓட்டு வாங்க ஜெயலலிதா தான் தேவைப்படுகிறார் என அதிமுகவை சார்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இபிஎஸ் கடுமையான விமர்சனம்
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனக்கு ஜெயலலிதா போட்டோவை வைத்துக்கொள்ள அனுமதி அளித்தது பற்றி எமோஷனலாக பேசியுள்ளார் செங்கோட்டையன். இதனிடையில் இவரை கோபி தொகுதியில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஈரோடு பரப்புரையில் பேசிய இபிஎஸ், செங்கோட்டையனை கடுமையாக ஒருமையில் விமர்சித்து பேசினார்.

அமைச்சர் பதவி பறிப்பு
ஜெயலலிதா இருந்த காலத்தில் அவரிடம் செங்கோட்டையன் மனைவி, மகன் வந்து கேவலமான புகார் கொடுத்தார்கள். இதனால் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்றெல்லாம் பேசினார். அதோடு அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் பரப்பினை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Spread the love