August 28, 2026

கரூர் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்ப்பதா? – அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: கரூர் கோயில்களின் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசை கண்டிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோயிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கி பக்தியை பண்பாட்டை வளர்த்தார்கள் அந்த கால ஆட்சியாளர்கள். கோயில் சொத்துக்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அள்ளி கொடுத்து கோயிலை அழிக்க துணிகிறார்கள் இந்த கால சுயநலவாத ஆட்சியாளர்கள்.

கரூரில் நான்கு பிரதான கோயில்களின் 3,084 ஏக்கர் நிலங்கள் கோயிலின் பொருளாதாரம் மற்றும் கோயிலுக்கு சேவை செய்யும் மக்கள் வாழ்வதற்கு தரப்பட்டவை ஆகும். ஆனால் காலபோக்கில் அந்த அப்பாவி மக்களை ஏமாற்றி பணத்தாசை காட்டி சட்டவிரோதமாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். கோயிலுக்கு தொண்டு செய்தவர்களுக்கு உதவியாக கொடுத்த கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அனுபவிப்பவர்களுக்கும் கோயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே ஆக்கிரமிப்புகள் தர்மத்திற்கு எதிரானது.

ஆனால் ஆக்கிரமித்தவர்கள் சொத்துக்களை சொந்தம் கொண்டாட விதித்த தடையை இந்து சமய அறநிலையத்துறை தற்போது விலக்கிக் கொண்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அரசின் நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது என்று 200-க்கும் மேற்பட்ட கோயில்களை இடித்த மாநில அரசு கோயில் நிலங்களை கூறுபோட்டு தாரை வார்க்க என்ன அருகதை உள்ளது.

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா? இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநில அரசின் இந்த அநியாய செயலை உரிய முறையில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து கோயில் சொத்துகளை பாதுகாக்க இந்து முன்னணி தொடர்ந்து போராடும்.

கோயில் சொத்துகள் பறிபோவதற்கு துணைபோகும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கோயில் சொத்துகளை தாரைவார்க்கும் அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love