March 3, 2026

“காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் நடுநிலையல்ல; பொறுப்பை துறப்பது” – சோனியா காந்தி

“காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் நடுநிலையல்ல; பொறுப்பை துறப்பது” - சோனியா காந்தி

புதுடெல்லி: ஈரான் உச்ச தலைவர் அயத்​துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில் மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதற்குச் சமம் என்று விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவரது கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் சோனியா காந்தி, ‘‘பிப். 28-ம் தேதி அமெரிக்காவும் – இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை மார்ச் 1 அன்று ஈரான் உறுதிப்படுத்தியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், அதற்கு நடுவில் பதவியில் இருக்கும் ஒரு நாட்டின் தலைவரை கொல்வது சர்வதேச உறவுகளில் தீவிர சிக்கலை ஏற்படுத்தும்.

அதிர்ச்சிகரமான இந்த விவகாரத்தில் இந்தியா காக்கும் மவுனம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அந்த படுகொலையையும் ஈரானின் இறையாண்மை மீறலையும் இந்திய அரசு கண்டிக்காமல் தவிர்த்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிவைத்த தாக்குதல்களைப் பற்றி குறிப்பிடாமல், ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதலை மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி கண்டித்துள்ளார். அதோடு, இந்த விவகாரம் “ஆழ்ந்த கவலையை” ஏற்படுத்துவதாகவும், “பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்” என்றும் பொதுவான கருத்துகளை மட்டுமே பிரதமர் மோடி வெளியிட்டார்.

ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.

இந்தச் சூழலில் மவுனம் நடுநிலையல்ல. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை அது எளிதாக்கும். சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில், மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதாகும். இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

கொலை நடந்ததற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார்.

புவி அரசியலைத் தாண்டி இந்தச் சம்பவத்தின் தாக்கங்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. இந்தியாவின் நிலைப்பாடு இந்த துயரத்திற்கு மறைமுக ஒப்புதலாகத் தோன்றுகிறது.

ஈரான் மீதான குண்டுவீச்சுகளையும் திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது.

ஏப்ரல் 2001-ல், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, ஈரானுடனான இந்தியாவின் ஆழமான வரலாற்று மற்றும் நவீன உறவுகளை உறுதிப்படுத்தியதை தற்போதைய அரசு நினைவில் கொள்ள வேண்டும்.

‘வசுதைவ குடும்பகம்’ (“உலகமே ஒரு குடும்பம்”) என்ற இந்திய சிந்தனை வெறும் விழாக்கால கோஷமல்ல. அது நீதி, கட்டுப்பாடு மற்றும் உரையாடலுக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Spread the love