April 6, 2026

காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் வேலைவாய்ப்பு பாதிப்பு: டெல்லியை விட்டு வெளியேறும் வெளி மாநிலத்தவர்

புதுடெல்லி: ஈரான் – அமெரிக்க, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் நடத்​தும் போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் கப்​பல்​கள் வரு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் சமையல் காஸ் சிலிண்டர்கள் விநி​யோகத்​தி​லும் பிரச்​சினை நிலவு​கிறது.

இந்நிலையில் வெளி​மாநிலங்​களில் இருந்து டெல்​லிக்கு வந்து குடியேறி​யுள்ள பலருக்கு சிலிண்​டர்​கள் கிடைக்கவில்​லை. அதிக விலை கொடுத்​தும் வாங்க முடியாத நிலை​யில் பலர் சொந்த கிராமங்​களுக்கு செல்கின்றனர். பழைய டெல்லி ரயில் நிலை​யத்​தில் சான்​ஜுக்டா என்ற பெண் தனது குடும்​பத்​தா​ருடன் டெல்​லியை விட்டு தனது சொந்த கிராமத்​துக்​குச் செல்​வ​தாகத் தெரிவித்​தார்.

அவர் மேலும் கூறும்​போது, “டெல்​லி​யின் நங்​லோய் பகு​தி​யில் வசித்து வரு​கிறோம். தற்​போது வேலை​யும் இல்​லை. சமையல் காஸ் சிலிண்​டரும் கிடைப்​ப​தில்​லை. கிடைத்​தா​லும் அதிக விலைக்கு விற்​கப்​படு​கிறது. அதை வாங்க எங்​களால் முடிய​வில்​லை. நான் சமையல் வேலை செய்து வரு​கிறேன். எனது கணவரும் கூலி வேலைக்​குச் செல்​கிறார். எனக்கு தினந்​தோறும் ரூ.200 மட்​டுமே கிடைக்​கிறது.

சமையல் காஸ் சிலிண்​டர்(5 கிலோ) ரூ.600-க்கு விற்​கின்​றனர். அதை வாங்க முடிய​வில்​லை. அதனால் தற்​போது கிராமத்​துக்​குச் செல்​கிறோம்.சமையல் காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் டெல்​லி​யில் திரு​மணங்​கள் நடை​பெறு​வதும் குறைந்​துள்​ளது. இதனால் சமையல் வேலை கிடைப்​ப​தில்​லை. நான் வேலை பார்த்து வந்த கம்​பெனியை​யும் மூடி​விட்​டனர்.

எனவே, ஹரி​யா​னா​வின் போரியா மாவட்​டத்​தி​லுள்ள எனது சொந்த கிராமத்​துக்​குச் செல்​கிறேன். அங்கு எப்படியாவது சமாளித்துக் கொள்வேன்’’ என்​றார். டெல்லி மட்​டுமல்​லாமல் நாட்​டின் பல நகரங்​களி​லும் இதே நிலை​தான் நில​வு​கிறது என்று சுபாஷ் நகரைச் சேர்ந்த வினோத் குமார்​(38) தெரி​வித்​தார். அவர் மேலும் கூறும்​போது, “நான் கூலி வேலைக்​குச் செல்​கிறேன். தினந்​தோறும் ரூ.400 கிடைக்​கும்.

ஆனால் இப்​போது வேலை கிடைப்​ப​தில்​லை. எனவே, பிஹாரில் உள்ள தர்​பாங்கா​வுக்​குச் செல்​கிறேன். இந்​தப் பிரச்​சினைக்கு மத்​திய அரசு தீர்வு காணவேண்​டும். சமையல் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்டை நீக்​கவேண்​டும். காஸ் சிலிண்​டர் கிடைக்​காத​தால் எனது மனைவி மண்​ணெண்​ணெய் அடுப்பில் சமைக்​கிறார். இதனால் வீட்டில் புகை சூழ்ந்​து​கொள்​கி​கிறது. எனக்கு இரு​மல் பிரச்​சினை ஏற்​படு​கிறது. வீட்டு உரிமை​யாளர் இதற்கு ஆட்​சேபம் தெரிவிக்​கிறார்’’ என்றார்.

Spread the love