சென்னை: குர்பானி கொடுக்க கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று, முதல்வரிடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், எம்.பி. கே.நவாஸ்கனி, மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் உள்ளிட்ட நிர்வாகிகள், முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழக அரசு சார்பில் இன்று (5-ம் தேதி) சென்னையில் நடைபெறும் காயிதே மில்லத் 131-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்குமாறு முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், தமிழக முஸ்லிம் சமுதாய மக்களின் முக்கிய கோரிக்கைகள் தொடர்பான மனு முதல்வரிடம் அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பக்ரீத் நாளின் குர்பானி கொடுக்கும் நடைமுறையை தடுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அரசின் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே விலங்குகளை வெட்ட வேண்டும் என்று, ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளை மேற்கோள் காட்டி சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளனர்.
இதனால், நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்ட அரசு அதிகாரிகள், பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் தங்களின் மார்க்க கடமையைச் செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More Stories
பழனி ரயில் நிலையத்தில் நடைபெறும் 14 கோடியில் நடைபெறும் பணிகளை கோட்டை மேலாளர் ஆய்வு
இண்டியா கூட்டணியை விட்டு விலகும் திமுக? – இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாஜக
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – ஜூன் 22-க்குள் தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவு