July 30, 2026

கென்யாவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 15 யானைகள் மர்ம மரணம்: நச்சுத்தன்மை காரணமா? தீவிர விசாரணை

நைரோபி: கென்யாவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 15 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி பகுதியில், கடந்த ஜூன் 24 முதல் ஜூலை 24 வரை ஒரே மாதத்தில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த 15 யானைகளில், 10 யானைகளுக்கு உடலின் சில உறுப்புகள் செயலிழக்கும் அளவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால், அவை எழுந்து நிற்கக்கூட முடியாமல் ஓரிரு நாட்களுக்குள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைரோபி பல்கலைக்கழகம் மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில், நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மர்ம மரணங்களில் உயிரிழந்த விலங்குகளில் பெரும்பாலானவை பெண் யானைகளும் அவற்றின் குட்டிகளுமாகும். இறந்தவற்றில் ஒரே ஒரு ஆண் யானை மட்டுமே இருந்தது. பாதிக்கப்பட்ட யானைகளின் உடல்கள் அனைத்தும் அம்போசெலி தேசியப் பூங்காவின் எல்லைக்கு வெளியே, 15 முதல் 30 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கிமானா சரணாலயம் (Kimana Sanctuary) மற்றும் குகு ராஞ்ச் (Kuku Ranch) ஆகிய பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Spread the love