சென்னை: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வறட்சியால் ஏற்படக்கூடிய தீ விபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் அரசுத் துறையினர் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால், வெப்ப அலை பாதிப்புகள் மற்றும் தீ விபத்துகள் மூலம் உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனைத் தடுக்க பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மின்சாதனங்கள், மின்கம்பிகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
காடுகள் மற்றும் திறந்தவெளியில் சிகரெட் துண்டுகளை அலட்சியமாக வீசுவதைத் தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக வீடுகளில் சிறிய தீயணைப்புக் கருவிகளை வைத்திருப்பது சிறந்தது.
LATEST
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, கோடைக்கால சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, அவசர உதவி எண்களைத் தெரியப்படுத்த வேண்டும். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வெப்ப அலை எச்சரிக்கைகளை முறையாக வெளியிட்டு, குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்களை ஆங்காங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே பெரும் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

More Stories
பற்றி எரியும் குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்: தாக்குதலுக்கு பின் ஈரான் கடும் எச்சரிக்கை!
வாக்குப் பதிவு தினத்தன்று பொதுவிடுமுறை: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்