Follow Us
சென்னை: கோடை விடுமுறைக் காலத்தை மாணவர்கள் பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாளை (ஏப். 17) முதல் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன. எனவே இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு: மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர்நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.
கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால்வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிகளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும்.
விடுமுறை நாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மனநலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதை சரியாகக் கையாள வேண்டும்.
அதன்படி தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளைக் கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநலனைப் பேணவும் முடியும். டி.வி, செல்போன் ஆகியவற்றைப் பார்ப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே பராம்பரிய உணவு வகைகளைத் தரவேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழ வகைகளை வழங்க வேண்டும்.
இதுதவிர மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும்.
அவர்களின் ஆர்வங்களைப் பொருத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறார் கதைகள் மற்றும் நீதி நூல்களைப் படிக்க அறிவுறுத்த வேண்டும்.
இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
தினமும் இருவேளை பல் துலக்கி, குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டும். பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More Stories
ஏப்.20 வரை தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து R.V நகர் ,முகமதிய புரம்,கிழக்கு ரத வீதி,நாதரஷாதெரு ,மணிகூண்டு கடைவீதி
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா