மதுரை: ஆவணங்கள், ஆகமச் சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மகா தீபம் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் ஏற்றப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் துணை ஆணையர் செல்வி, அறங்காவலர் குழுத்தலைவர் சண்முகசுந்தரம், அறங்காவலர்கள் ராஜபாண்டியன், அழகப்பன், ரெஜினாதேவி, சித்ரா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழர்களின் தொன்மையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாக்கள், பூஜைகள், வழிபாட்டுச் சடங்குகள் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் சமய மரபுகள். பராம்பரியப் பழக்க வழக்கங்கள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில்தான் நடைபெறுகின்றன.
குறிப்பாக, கோயிலில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் வழக்கத்தின்படி, மூலவரின் சிரசுக்கு நேர் மேலே மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நீண்ட காலத் தொடர்ச்சியான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices), சமய மரபுகள் மற்றும் சடங்குகள் (Custom and Rituals), ஆகம விதிகள் (Agama rules) ஆகியவை கோயிலின் தனித்துவமான சமய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
எனவே, நமது கோயிலில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மரபுகள், பாரம்பரிய பழக்க வழக்கங்கள், ஆகம விதிமுறைகள் மற்றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும், அவற்றின் வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் சமய முக்கியத்துவம் கொண்ட ஆவணங்கள், ஆகமச் சான்றுகள் மற்றும் ஸ்தானிகர்களின் கருத்துகளின் அடிப்படையில், வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்றவும், அதைத் தொடர்ந்து, கோயில் மரபு மற்றும் பழக்க வழக்கங்களை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் கோயில் அறங்காவலர் குழு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்தின்படியே கோயில் கோயில் மூலவரின் சிரசுக்கு நேர் மேலே உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் நேற்று மாலை 6 மணியளவில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆட்சியர் உத்தரவு மதிக்கப்படவில்லை
ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, உரிய உத்தரவுகளை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பிறப்பித்திருந்தார். ஆனால், கோயில் அறங்காவலர் குழு தனித்தீர்மானம் நிறைவேற்றி ஆகம விதிப்படிதான் தீபம் ஏற்ற முடியும். தீபத்தூணில் தீபம் ஏற்ற இயலாது என தெரிவித்துவிட்டது. இதனால்தான் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கு காரணம் கோயில் அறங்காவலர் குழுவும், நிர்வாகம்தான்’ என்றார்.

More Stories
கடைவீதியில் விவசாயி வெட்டிக்கொலை!
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி டிஜிபியிடம் உதயநிதி ஸ்டாலின் மனு
அன்பில் மகேஸை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி