February 7, 2026

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: 2-வது வழக்கிலும் உன்னிகிருஷ்ணனுக்கு ஜாமீன்

உன்னிகிருஷ்ணன்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபரான உன்னிகிருஷ்ணன் போட்டிக்கு, இரண்டாவது வழக்கிலும் இன்று (வியாழக்கிழமை) ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் கதவு நிலைகளில் இருந்து தங்கம் திருடப்பட்ட வழக்கில், கொல்லத்தில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உன்னிகிருஷ்ணனுக்கு இன்று ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான 90 நாள் காலக்கெடு முடிந்ததால், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உன்னிகிருஷ்ணன் அக்டோபர் 2025-ல் கைது செய்யப்பட்டார், அவரது ஜாமீன் மனு மீதான வாதங்கள் நேற்று (புதன்கிழமை) முடிவடைந்தன.

உன்னிகிருஷ்ணன் ஏற்கெனவே துவாரபாலகர் சிலை தங்கம் திருட்டு வழக்கில் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த இரண்டு வழக்குகளிலும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இரு வழக்குகளிலும் ஜாமீன் பெற்றதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள், கருவறை, தூண்கள் மற்றும் கதவு நிலைகளில் இருந்து தங்கத்தை திருடியதாக உன்னிகிருஷ்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற மூன்று குற்றவாளிகளான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமார் மற்றும் முன்னாள் நிர்வாக அதிகாரி எஸ். ஸ்ரீகுமார் ஆகியோருக்கும் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஒன்பது குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்கான பணிகளில் சிறப்பு புலனாய்வுக் குழு தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த 9 குற்றவாளிகள் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் ஊழியர்கள் என்பதால், வாரியம் மற்றும் கேரள அரசு ஆகிய இரு தரப்பிலிருந்தும் அனுமதி தேவைப்படுகிறது.

இதற்கிடையில், சபரிமலை தங்கத் திருட்டு குறித்த விசாரணை ஆபத்தான முறையில் திசைமாறிச் செல்கிறது என்று கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீசன் மீண்டும் குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மாநில அரசு பாதுகாப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சட்டமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நடத்திய போராட்டத்தின் போது பேசிய சதீசன், “காவலில் இருக்க வேண்டிய அனைவரும் இப்போது சுதந்திரமாக இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட அனைத்து முக்கிய நபர்களிடமும் விசாரணை விரிவடையாதது கவலை அளிக்கிறது. இந்த குற்றவாளிகள் சிபிஎம் கட்சி மற்றும் அரசுக்கு மிகவும் முக்கியமானவர்களாகத் தெரிகிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயன் இந்த வழக்கின் விசாரணையில் சட்டவிரோத தலையீட்டை தெரிந்தே அனுமதித்தார். இந்தத் தலையீடு காரணமாகவே, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் முன்பு மறுத்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இப்போது ஜாமீன் வழங்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்படவில்லை, முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை. விசாரணை ஒரு முட்டுச்சந்தில் நிற்கிறது” என்று சதீசன் கூறினார்.

Spread the love