June 13, 2026

சிஎம் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு அரசு இல்லத்தில் தீ விபத்து – என்னாச்சு?

Fire at Tamil Nadu Illam: டெல்லியில் முதலமைச்சர் விஜய் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் மின்கசிவு காரணமாக திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சிலின் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தமிழ்நாடு அரசு இல்லத்தின் கேண்டீனில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கவுன்சிலினின் 11வது கூட்டம் இன்று (11 ஜூன் 2026) நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த முதலமைச்சர் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்பார்கள். மேலும், மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவது வழக்கம்.

  

முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்

அதன்படி, இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (10 மே 2026) 3 நாள் அரசுமுறைப் பயணமாக சென்றிருந்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் முதல் மத்தியக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான முக்கிய திட்டங்கள் மற்றும் துறை ரீதியாக கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர்களை சந்தித்த முதலமைச்சர் விஜய்

டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் விஜய் நேற்று இந்திய குடியரசுத் தலைவர் திரளவுபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப் பரிசு ஒன்றையும் துணை குடியரசுத் தலைவர் சிபிஆர் வழங்கியிருந்தார். அதன்பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தார்.

தமிழ்நாடு அரசு இல்லம்

முதலமைச்சர் விஜய்யின் முதல் டெல்லி பயணத்தின் போதே, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்திக்க இருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்து ஆதரவு வழங்கிய பிறகு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் முதலமைச்சர் விஜய்யின் 2வது சந்திப்பு ஆகும். தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் ஒவ்வொரு முறை டெல்லி செல்லும்போதும், அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்குவது வழக்கம்.

தமிழ்நாடு அரசு இல்லத்தில் திடீர் தீ விபத்து

அதன்படி, டெல்லி பயணத்தின் 2வது நாளான இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சற்று நேரத்திலேயே தமிழ்நாடு இல்லத்தின் கேண்டீனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் சேதம் எதுவும் இல்லை என்றும், ஏசி இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

Spread the love