February 7, 2026

சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து வழிபாடு: வேடசந்தூர் அருகே பாரம்பரிய விழா

வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற நிலாப்பெண் வழிபாட்டில், ஆவாரம்பூ கூடையுடன் அழைத்துவரப்பட்ட சிறுமி.

வேடசந்தூர் அருகே கோட்டூர் கிராமத்தில் நடைபெற்ற நிலாப்பெண் வழிபாட்டில், ஆவாரம்பூ கூடையுடன் அழைத்துவரப்பட்ட சிறுமி.

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள கோட்டூரில், ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து இரவு முழுவதும் வழிபடும் பாரம்பரிய விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) இரவு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் ஒவ்வோர் ஆண்டும், தை மாதம் பவுர்ணமி அன்று கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை நிலாப்பெண்ணாக தேர்வு செய்து அன்று பவுர்ணமி நிலவில் இரவு முழுவதும் வழிபாடு நடத்திவருவது வழக்கம்.

இந்த ஆண்டு தை மாதம் பவுர்ணமி நாளான நேற்று இரவு நிலாப்பெண் வழிபாடு கொண்டாட ஏற்பாடுகள் செய்தனர். முன்னதாக

ஒரு வாரத்திற்கு முன்பே, ஊரில் உள்ள சிறுமிகளின் பெயர்களை எழுதிப்போட்டு பெரியோர்கள் முன்னிலையில் குலுக்கள் முறையில் நிலாப்பெண்ணை தேர்வு செய்கின்றனர்.

இந்த ஆண்டு நிலாப்பெண்ணாக கோட்டூரை சேர்ந்த விவசாயி மூர்த்தி – மகாலட்சுமி தம்பதியினரின் மகள் ஜியாஸ்ரீ(11) தேர்வு செய்யப்பட்டார். இவர் அதே ஊரில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இவருக்கு ஒரு வார காலத்திற்கு, அப்பகுதியில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி, அங்குள்ள கோயிலில் வைத்து பால், பழம் உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி, மகிழ்ந்தனர்.

நேற்று இரவு தை பவுர்ணமி நாளில் இரவு 9 மணிக்கு நிலாப்பெண்ணாக தேர்வு செய்யப்பட்ட சிறுமியை, ஊரில் உள்ள மாசடச்சியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க, ஊர் மக்கள் புடை சூழ சரளைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு கூடியிருந்த பெண்கள், நிலாப்பெண்ணுக்கு புத்தாடை அணிவித்து, ஆவாரம் பூவை தலை மற்றும் கை கால்களில் சூடி, ஒரு கூடையில் ஆவாரம்பூவை நிரம்பி எடுத்துவரச் செய்து மீண்டும் ஊரில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு அழைத்து வந்தனர். கோயில் முன்பு நிலாப்பெண்ணை அமர வைத்து பெண்கள் ஒன்று கூடி பாட்டு பாடி, கும்மி அடித்து மகிழ்ந்தனர்.

அதன் பிறகு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நிலா பெண்ணுக்கு சீர் செய்தனர்.

இன்று அதிகாலையில் ஊர் எல்லையில் உள்ள நீர் நிறைந்த கிணற்றுக்கு அழைத்துச் சென்று கூடையில் இருந்த ஆவாரம்பூக்களை கிணற்றில் போட்டுவிட்டு அனைவரும் வணங்கினர். அதேபோல் மண் கலையத்தில் விளக்கு ஏற்றி மிதக்க விட்டு, வழிபாடு நடத்தினர்.

அதன் பிறகு மக்கள் அனைவரும் வீடு திரும்பினர். இரவு முழுவதும் இந்த நிலாப்பெண் வழிபாடு நடைபெற்றது.

இதுகுறித்து ஊர்மக்கள் கூறுகையில், “தை மாதம் பவுர்ணமி நாளில் நிலாப்பெண் வழிபாடு செய்வது, பல நூற்றாண்டுகளாக எங்கள் முன்னோர் காட்டிய வழியில் தொன்று தொட்டு கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழிபாடு நடத்துவதன் மூலம் கிராமத்தில் விவசாயம் செழிக்கும், கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே ஆண்டுதோறும் இரவில் இந்த வழிபாட்டை நடத்தி வருகிறோம்.” என்றனர்.

Spread the love