டெல்லி: 2026ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறை, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை, குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகியவற்றைச் சேர்ந்த மொத்தம் 1,057 பணியாளர்களுக்கு வீரதீரச்செயல் மற்றும் சேவைக்கான பதக்கங்கள் அறிவித்தது ஒன்றிய உள்துறை அமைச்சகம்.
இந்த விருதுகளில் 301 வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்கள் (GM), 92 சிறப்புச் சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள் (PSM) மற்றும் 664 தகுதியுடை சேவைக்கான பதக்கங்கள் (MSM) ஆகியவை அடங்கும். 301 வீரதீரச் செயல்களுக்கான பதக்கங்களில், 272 காவல்துறைப் பணியாளர்களுக்கும், 29 தீயணைப்புத் துறைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
வீரதீர விருது பெற்றவர்களில், 197 பேர் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும், 51 பேர் ஜம்மு காஷ்மீரிலிருந்தும், 12 பேர் வடகிழக்கிலிருந்தும், 41 பேர் இதரப் பகுதிகளிலிருந்தும் ஆவர். உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றுதல், குற்றங்களைத் தடுத்தல் அல்லது குற்றவாளிகளைப் பிடித்தல் போன்ற வெளிப்படையான வீரச் செயல்களுக்காக வீரப்பதக்கம் வழங்கப்படுகிறது.
சிறந்த சேவைக்கான 92 குடியரசுத் தலைவர் பதக்கங்களில், 83 காவல்துறைப் பணியாளர்களுக்கும், நான்கு தீயணைப்புத் துறைப் பணியாளர்களுக்கும், மூன்று குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைப் பணியாளர்களுக்கும், இரண்டு சீர்திருத்தத் துறைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
சிறப்பு மற்றும் புகழ்பெற்ற சேவைப் பணிக்காக குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படுகிறது. மேலும், மொத்தம் 664 தகுதியுடை சேவைக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன; இதில் காவல்துறைப் பணியாளர்களுக்கு 606, தீயணைப்புத் துறைப் பணியாளர்களுக்கு 28, குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைப் பணியாளர்களுக்கு 18 மற்றும் சீர்திருத்தத் துறைப் பணியாளர்களுக்கு 12 பதக்கங்கள் அடங்கும்.
இந்தப் பதக்கம், சமயோசித புத்தி மற்றும் கடமையுணர்வால் வெளிப்படும் மதிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கிறது. அமைச்சகம், மாநில வாரியாக மற்றும் படை வாரியாக விருது பெற்றவர்களின் பட்டியல்களையும் வெளியிட்டுள்ளது.

More Stories
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து
சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும்முன் ‘வந்தே மாதரம்’ – நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவு