April 2, 2026

சென்னையில் வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு

சென்னை: ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று, வணிகப் பயன்பாட்டிற்கான  சமையல் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. 

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. 

சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.2,140-லிருந்து உயர்ந்து ரூ.2,240 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ரூ.2078 ஆகவும், கொல்கத்தாவில் ரூ. 2208 ஆகவும், மும்பையில் ரூ.2031 ஆகவும் விற்பனை ஆகிறது.

வணிக சிலிண்டர் விலை சுமார் ரூ.200 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பது ஹோட்டல் உரிமையாளர்கள், உணவகங்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கள்ளச் சந்தையில் வணிக சிலிண்டர் ரூ.6500 வரை விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. 

வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்ட போதிலும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இது இல்லத்தரசிகளுக்குச் சற்று நிம்மதியைத் தந்தாலும், வணிக ரீதியிலான பாதிப்புகள் சந்தையில் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய கிழக்கில் தற்போதைய மோதல் போக்கு நீடித்தால், வரும் காலங்களில் எரிபொருள் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Spread the love