April 14, 2026

’’செல்வச் செழிப்பில் வளர்ந்த ஸ்டாலினுக்கு மக்கள் கஷ்டங்கள் தெரியுமா..?’’

  • திண்டுக்கல்லில் சீறிய இபிஎஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சியில் பரப்புரை செய்துவிட்டு அடுத்தபடியாக திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேகம்பூரில் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
அப்போது இபிஎஸ் பேசியதாவது;
’’திண்டுக்கல் நகரமே அதிரும் வகையில் கடல் போல் மக்கள் வெள்ளம். திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. உங்கள் எழுச்சியில் நம் வேட்பாளர்கள் வெற்றி தெரிகிறது.
அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ நத்தம் விஸ்வநாதன், வேடசந்தூர் தொகுதியில் டாக்டர் பரமசிவம், நிலக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ தேன்மொழி, பழனி தொகுதியில் ரவிமனோகரன் , ஆத்தூர் தொகுதியில் விஸ்வநாதன் ஆகிய 6 பேருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.
அதேபோல் கூட்டணிக் கட்சியான தமாகா சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகருக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். என் மூத்த அண்ணன் இரண்டு பேர் இங்கிருக்கிறார்கள், அவர்களுடைய ஆசியோடு தான் நானே இங்கு இருக்கிறேன். எம்ஜிஆர் காலத்திலும், அம்மா காலத்திலும் இயக்கத்துக்காக உழைத்தவர்கள். திண்டுக்கல் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் வருவதற்குத் துணையாக இருந்தவர்கள். மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் போட்டியிடுபவர்களுக்கு பொன்னான வாக்குகளை அளியுங்கள்.
ஸ்டாலினுக்கு அதிமுகவை எதிர்க்க தெம்பில்லை. அதனால் எடப்பாடி டெல்லிக்கு அடிமை, தமிழ்நாடுக்கும் டெல்லிக்கும் போட்டி என்று பேசிக்கொண்டு இருக்கிறார். இப்போது என்ன தேர்தல் நடக்கிறது..? சட்டமன்றத்தேர்தல்தானே..? திமுக ஆட்சியை அகற்ற நடக்கும் தேர்தல். அதனால் தான் அவரால் வேறு எதுவும் பேசமுடியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு வேட்பாளரை அறிமுகப்படுத்தும் நேரத்தில் ஸ்டாலினுக்கு உதயசூரியன் சின்னமே மறந்துவிட்டது. அதுகூட தெரியாமல், கேட்டு, பேசுகிறார். ஸ்டாலின் அவர்களே தெரிந்துகொள்ளுங்கள், நடைபெறுவது தேர்தல் சட்டமன்ற தேர்தல். இதை பற்றி பேசுங்கள்.
ரோம் மன்னன் பிடில் வாசித்தமாதிரி கிரிக்கெட் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். காரில் போகும்போது கிரிக்கெட் பார்க்கும் முதல்வர் இருந்தால் விளங்குமா? அதை படம் பிடித்து போடுகிறார்கள். இது நாட்டுக்குத் தேவையா? சேவை செய்யத்தான் மக்கள் உங்களைத் தேர்வு செய்தார்கள். கிரிக்கெட் பார்ப்பதற்கு இல்லை. இவர் கவலையில்லாத முதல்வர், மக்கள் கஷ்டங்கள் பற்றி எள் முனையளவும் கவலையில்லை. கஷ்டப்பட்டு மேலே வந்தால்தான் அருமை தெரியும். நான் கீழே இருந்து மேலே வந்தவன், அவர் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர். நாட்டு மக்கள் நிலவரம் தெரியாத முதல்வர்.
எடப்பாடி பாராளுமன்ற மறுவரையில் என்ன சொல்கிறார் என்று கேட்கிறார், ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். மறுவரையில் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்காது என்று தெளிவுபடுத்தினார். ஆனால் இதை கையில் எடுத்துக்கொண்டு பேசுகிறார். மத்திய அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார்.
ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. நிச்சயம் தோல்வி பெறுவது உறுதி. அதனால் ஏதேதோ பேசுகிறார், அத்தனையும் பொய். மும்மொழிக் கொள்கையில் என்ன செய்வார் என்று கேட்கிறார். காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போதுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்படியிருக்கும் போது காங்கிரஸோடுதான் கூட்டணி வைத்திருக்கிறார். ஆனால் மும்மொழி கொள்கை பற்றி பேசுகிறார். ஸ்டாலின் குடும்பத்தினர் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். அவர்கள் பேசுவது ஒன்று, செய்வது ஒன்று. அந்த காலத்தில் எல்லோரையும் எளிதாக ஏமாற்றினீர்கள். இந்த காலத்தில் அப்படி ஏமாற்ற முடியாது. விஞ்ஞான உலகில் நீங்கள் சொல்லும் பொய்யெல்லாம் உண்மையாகாது.
இந்த மாவட்ட உணவுத்துறை மந்திரி பொங்கல் தொகுப்பு கொடுத்ததை யாராலும் மறக்கவே முடியாது. அதிமுக திட்டம் தொடர்கிறதே என்று நினைத்தேன், 21 பொருட்கள் கொடுத்தனர். புளியில் பல்லி இருந்தது, அரிசியில் வண்டு இருந்தது, வெல்லம் பார்த்தால் ஒழுகுகிறது. யார் கொடுத்தது..? திருவண்ணாமலையில் 2 டன் வெல்லம் சாப்பிட தகுதியில்லை என்று கலெக்டர் நிராகரித்ததைக் கொடுத்தனர். ஏழைகளுக்கு தரமான பொருட்கள் கொடுக்காமல் அதிலும் ஊழல் செய்யும் அரசு தேவையா?
எழுச்சி பயணம் செய்த நேரம் விவசாயிகள் என்னிடம் சொன்னார்கள். கண்வலி கிழங்கு விதை பயிரிட்டிருக்கிறோம். இங்கு ஒழுகுற வெல்லம் கொடுத்த அமைச்சர், சிண்டிகேட் போட்டு வெளி மாநில வியாபாரிகள் அதை வாங்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தினார். எங்களுக்கு அமைச்சரால் வருமானம் போய்விட்டது. அமைச்சரே ஆள் வைத்து குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை அடிக்கிறார் என்று சொன்னார்கள். அதைக் கூட மந்திரி விட்டுவைக்கவில்லை. எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம். அதுபோல எந்தவகையில் எல்லாம் கொள்ளை அடிக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள்.
இப்போது 8 ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் கொடுக்குறாங்களாம். ஏனென்றால், அதில் தானே ஊழல் செய்ய முடியும். நாம் நேரடியாக வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம். கூப்பன் என்றால் கமிஷன் கிடைக்கும். 100% திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை, ஆனாலும் தேர்தல் அறிக்கை வெளியிடும்போது கூட திமுக குடும்பத்திற்கு என்ன வருமானம் வரும் என்று திட்டமிட்டுத்தான் அறிவிக்கிறார்கள். இதுதான் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள வேறுபாடு. 8 ஆயிரம் கூப்பனை திமுககாரர்கள் கமிஷன் வாங்கிக்கொண்டுதான் கொடுப்பார்கள். கடையில் குறிப்பிட்ட பொருள்தான் வாங்கச் சொல்வார்கள். அதில் கமிஷன் கிடைக்கும். மக்கள் பணத்தை எந்த வகையில் எல்லாம் சுரண்ட முடியுமோ, அப்படியெல்லாம் சுரண்டுவதற்கு தேர்தல் அறிக்கை வெளியிடும் கட்சி அது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கிராமப் புறங்களில் பயிலும் ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, எனது ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் தான் 7.5% உள் இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு மூலம், கடந்த அதிமுக ஆட்சியில் 3 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். யாரும் கோரிக்கை வைக்கவில்லை. நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் அமல்படுத்தினேன்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், தாங்கள் இருக்கும் ஊர்களிலும், அருகாமையிலும் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டன. ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்குசென்று சிகிச்சை எடுத்துவந்தனர். அம்மா மினி கிளினிக்கில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்டாலினுக்குப் பொறுக்க முடியவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும்.
இங்கு விவசாயிகள் அதிகம், மழை காலத்தில் நீர் சேமிக்க குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம். அதன்மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. தூர் வாரப்பட்டதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. அதிமுக ஆட்சியில் இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகள் மண் அள்ளிக்கொள்ளலாம்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 2016ம் ஆண்டு அம்மா முதல்வராக இருந்தபோதும், அடுத்ததாக 2021ம் ஆண்டு நான் முதல்வராக இருந்தபோதும் என ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எனது ஆட்சியில் மட்டும் சுமார் 12,100 கோடி ரூபாய் அளவுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சியில் வரி ஊழல், அதிகாரிகள் கம்பி எண்ணுகிறார்கள். உங்களிடம் வரி வாங்கி, மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும், அதுதான் பணி. ஆனால் அதில் நான்கரை கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ளனர்.
அதிமுக ஆட்சியில் எவ்வளவு பிரச்னை செய்தார்கள்..? எத்தனை போராட்டம்..? அனைத்துக்கும் அனுமதி கொடுத்தேன். இந்த ஆட்சியில் கூட்டணி கட்சிக்கே போராடுவதற்கு அனுமதி கிடையாது. மக்கள் பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டுவரும் போராட்டத்தை முடக்கியது திமுக.
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலைமுடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. இதனால், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பாதிப்பு. எதிர்க்கட்சி என்ற முறையில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்தேன். பேட்டி கொடுத்தேன், கண்டுகொள்ளவே இல்லை. போதை ஆசாமிகளால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. இதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால், திமுகவினர் துணை நிற்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. திமுக ஆட்சியில் 18 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவானது, அதில் 6999 சிறுமிகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் என்று சமூகநலத்துறை அமைச்சரே சொல்கிறார். போக்சோ என்றால் 18 வயதுக்கு குறைவாக இருக்கும் சிறுமிகள் தொடர்பான பாலியல் வழக்கு. இந்த ஆட்சி நல்லாட்சியா? இரண்டு வயது குழந்தையைக் கூட காப்பாற்ற முடியவில்லை, ஸ்டாலின் அப்பா என்கிறார், குழந்தை அப்பா அப்பா என்று கதறும்போது ஸ்டாலின் எங்கே போனார்? அப்போதெல்லாம் அப்பாவுக்கு காது கேட்காது.
இபிஎஸ் பாஜகவுக்கு அடிமை, மதவாத கட்சிக்கு துணை நிற்கிறார் என்று பேசுகிறார் ஸ்டாலின். பாஜக வேர் ஊன்றுவதற்கு துணை நிற்கிறேன் என்றால், 1999, 2001 தேர்தல்களில் திமுக பாஜகவோடு கூட்டணி வைத்ததா இல்லையா? கூட்டணி ஆட்சியில் முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தார்…. பாருங்கள். (போட்டோ காட்டுகிறார்) உங்கள் தாத்தா என்னென்ன பண்ணினார் என்று பாருங்கள் உதயநிதி.
நாம் கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சி. எப்படி மக்களை திசை திருப்புகிறார்கள் என்று பாருங்கள். சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்குவதற்கு ஸ்டாலின் நடிக்கும் நாடகம் இது. கருணாநிதி முன்பு மோடியை நல்லவர் என்று சொன்னார். மோடி திறமையானவர் என்று சொல்கிறார் கருணாநிதி. அவர்கள் சொன்னால் சரி, நாம் சொன்னால் தப்பு என்பது எந்த விதத்தில் நியாயம்? (போட்டோ காட்டுறார்). இவ்வளவும் பேசியவர்களுக்கு நம்மை விமர்சிக்க யோக்கியதை இருக்கிறதா..?
தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு தலைமை அதிமுக. இங்கு அதிமுக ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் இபிஎஸ். இவ்வளவு சொன்ன பிறகும் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் போட்டி என்றால், அப்படி இல்லை என்றுதான் அர்த்தம்.
மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றார். 15 ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தது திமுக. அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றி திமுக கவலைப்படவில்லை. அப்போது திட்டத்தை வாங்கி இருக்கலாமே..? அதிகாரம் இருக்கும்போதுதான் கிடைக்கும். இப்போது கொடுக்கவில்லை என்கிறீர்கள்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் கிடைக்கும். நாங்கள் இணக்கமாக இருந்தோம், மெட்ரோ ரயில் திட்டம், ஒரே திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கினோம். 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாங்கினோம். திண்டுக்கல்லில் நான் அடிக்கல் நாட்டினேன். இந்தியாவில் எந்த அரசும் கேட்டுப் பெறவில்லை. பலதேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், ரயில் பாதைகள், ரயில்கள், கேட்டதெல்லாம் கொடுத்தனர். நீங்கள் எப்போதும் எதிர்த்துக்கொண்டிருந்தால் எப்படி கொடுப்பார்கள்? தேர்தல் நடக்கும்வரை போட்டி இருக்கலாம், தேர்தல் முடிந்த பின் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
ஒரு நாளாவது நாடாளுமன்றத்தில் மக்களுக்காகப் பேசினார்களா? அதிமுக கூட்டணியில் இருந்தும் காவிரி விவகாரத்தில் 22 நாட்கள் 37 எம்பிக்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தோம். அதுதான் அதிமுகவின் வலிமை. தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட போராடினோம். இப்படி திமுக செயல்பட்டதா?
எப்போது பார்த்தாலும் நீட் என்கிறார்கள். திமுகவும் காங்கிரஸும் தான் 2010ல் நீட் கொண்டுவந்தனர். நீட்டை கொண்டுவந்ததும் இவர்கள்தான், எதிர்ப்பதும் இவர்கள்தான். டபுள் கேம். நாங்கள் விதிவிலக்குப் பெற போராடினோம், அம்மா ஒருமுறை விதிவிலக்கு பெற்றார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் என்ன செய்ய முடியும்.?
2021 வாக்குறுதியில் முதல் கையெழுத்து நீட் விலக்கு, உதயநிதி ரகசியம் இருக்கிறது என்றார். இதுவரை ரகசியத்தைச் சொன்னாரா? முதல்வர் ரகசியத்தை சொல்லிவிட்டார், விதிவிலக்கு பெற முடியாது என்று சொல்லிவிட்டார். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து அந்தர்பல்டி அடித்தார். நீட்டுக்கு ஆதரவாக வாதாடியது சிதம்பரத்தின் மனைவி நளினி, எங்கள் மீது பழி சுமத்தினால் நியாயமா?
அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட அம்மா உணவகம் திறந்து, சுவையான தரமான உணவு கொடுக்கப்படும். முதல்வர் நேரடி பார்வையில் இருக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி அறிவிப்புகளை நிறைவேற்றுவார்கள்? கடன் இருக்கிறதே என்கிறார்கள்.
கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டுகாலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன; மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதேயாண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை; கலால் வரி, வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் உள்ளிட்ட அரசுக்கு வருவாய் கிடைக்கும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. ஒரு ரூபாய் வரி வருவாய் இல்லாமல் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். கொரோனா காலத்தில் விலைவாசி உயராமல் அதிமுக அரசு பார்த்துக்கொண்டது. இந்தியாவிலேயே சிறந்த முறையில் பொருளாதாரத்தை நிலைநாட்டி, திறமையான நிர்வாகம் கொடுத்த அரசு, அதிமுக அரசு. அதிமுக ஆட்சியை விட வரி வருவாய் திமுக அரசுக்கு அதிகம், அதனால் வரி வருவாய் அதிகரித்து திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படும்.
கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது, சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். இதன்மூலம், எப்படி தேர்வெழுதி எப்படி அடுத்த வகுப்புக்குச் செல்லப்போகிறோம்? என்று ஏக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு விடிவுகாலம் அமைந்தது.
நான் முதல்வராக இருந்தபோது வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அதிமுக. புயல், வெள்ளம் புரட்டிப்போட்டது, அவற்றை சரிசெய்தோம். கொரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம், விலைவாசி உயரவில்லை. கடன் வாங்கவில்லை. 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன். ஒருபக்கம் கடன், ஒருபக்கம் வருவாய் அதிகரிக்கிறது. ஆனால், திட்டங்கள் எதுவுமில்லை. மக்கள் பணம் எங்கே சென்றாலும் அதை திரும்பப்பெற்று அரசு கஜானா நிரப்பப்படும்.
திமுக ஆட்சியில் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துவிட்டது. வீடுகளுக்கு முதலில் 52% உயர்த்தினார்கள். ஆண்டுக்கு 5% என மூன்றாண்டுகளில் 15% உயர்த்தி, இப்போது 67% ஆக உள்ளது. கடைக்கு பீக் ஹவர் என்ற பெயரில் டபுள் சார்ஜ் வசூலிக்கிறார்கள். வீட்டுவரி 100% உயர்ந்துவிட்டது, ஆண்டுக்கு 6% உயர்வு என்று இரண்டு வருடத்தில் 12% ஏற்றிவிட்டனர். கடைக்கு வரி 150% உயர்ந்துவிட்டது, கடைக்கும் ஆண்டுக்கு 6% உயர்வு. போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்டுவிட்டனர். மக்கள் மீது வரிச்சுமை சுமத்திய அரசு தேவையா?

அதிமுக ஆட்சியில் மாநகராட்சி பிளான் அப்ரூவலுக்கு ஆயிரம் சதுரடிக்கு 38 ஆயிரம் தான் கட்டணம். அதுவே திமுக ஆட்சியில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் கட்டணம். கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. கட்டுமானப் பொருட்கள் எம்சாண்ட் அதிமுக ஆட்சியில் 3 ஆயிரம், திமுக ஆட்சியில் 6 ஆயிரம், ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் திமுக ஆட்சியில் 5,500. ஒரு டன் கம்பி அதிமுக ஆட்சியில் 40 ஆயிரம், திமுக ஆட்சியில் 65 ஆயிரம். ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் 7-8 ரூபாய், இப்போது 12-14 ரூபாய். சிமெண்ட் ஒரு மூட்டை அதிமுக ஆட்சியில் 240 ரூபாய், திமுக ஆட்சியில் 350 ரூபாய். மரம் 200% உயர்வு. எப்படி வீடு கட்டமுடியும்? கட்டுமானப் பொருட்கள் விலை உயரும்போது அது அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நானும் சட்டமன்றத்தில் இதுபற்றி கேட்டேன், எந்த நடவடிக்கையும் இல்லை.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தி 125 நாளாக உயர்த்த வைத்தோம், அடுத்த அதிமுக ஆட்சியில் 150 நாளாக உயர்த்தப்படும்.
இஸ்லாமியர்களே சிந்தியுங்கள். கூட்டணி வேறு, கொள்கை வேறு. இரண்டையும் ஒன்றாக சேர்க்கக்கூடாது. வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணி. திமுக கூட்டணியில் இருப்பவர்கள் அதிமுக கூட்டணியில் இருந்தவர்கள் தான். அந்த அடிப்படையில் தான் பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கிறோம், கூட்டணி வைத்ததாலே பாஜக சொல்வதையெல்லாம் கேட்போம் என்று ஸ்டாலினும், கூட்டணித் தலைவர்களும் அவதூறு பரப்புகிறார்கள். 31 ஆண்டுகாலம் ஆண்ட கட்சி அதிமுக. மதச்சண்டை, ஜாதிச்சண்டை வந்ததா..? கண்ணை இமை காப்பதுபோல பாதுகாத்தோம். அதிமுக ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.
இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஏராளமான திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். 2001ம் ஆண்டு முதல் ரமலானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க 5400 மெட்ரிக் டன் அரிசி கொடுத்தோம், நாகூர் தர்காவுக்கு சந்தனக் கட்டைகள் விலையில்லாமல் கொடுத்தோம், ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு மானியத்தை 2018ல் நிறுத்திவிட்டாலும், மாநில அரசு சார்பில் முதலில் 6 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. பின்னர் 2021ல் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, மானியத் தொகை 12 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது; ஹாஜிகளுக்கு மதிப்பூதியம், உலமாக்கள், மோதினார்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது; உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. வக்ஃப் வாரியத்துக்கு ஆண்டு மானியம், பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் புனரமைப்பு நிதி வழங்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு நேரடி நியமன முறையில் நிரப்பப்படாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறையை நீடிக்க அரசாணை வெளியிடப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையில் நாகூர் தர்கா குளக்கரை சேதமடைந்துவிட்டதால், அதனை சரிசெய்ய நானே நேரில் பார்வையிட்டு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி சீரமைத்துக் கொடுத்தேன். சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டது; ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக, எதிர்த்து ஓட்டுப்போட்டது திமுக. மறைந்த அப்துல்கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டது; திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மற்றும் ஹைதர் அலி வாழ்க்கை வரலாறு குறித்த மணி மண்டபம் அமைக்கப்பட்டது; கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இவ்வளவும் செஞ்சது நாம், ஒன்றுமே செய்யாமல் ஏமாற்றி கவர்ச்சிகரமாகப் பேசி நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின். அதிமுக செய்ததை சொல்கிறேன். திண்டுக்கல் மக்கள் கோரிக்கை ஏற்று, பிரமாண்டமான அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தேன், நிலக்கோட்டை அரசு கலை கல்லூரி, வைகை அணையில் இருந்து 58 ம் கால்வாய் அமைப்பு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கு புதிய கட்டடம், நத்தம் நிலக்கோட்டை 656 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், ரயில்வே பாலங்கள், திண்டுகல்லில் உள் விளையாட்டு அரங்கம், அரசு மருத்துவமனை மேம்பாடு, கொடைக்கானல் தடையில்லா குடிநீர் வழங்க குண்டாறு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கொடைக்கானல் நகர் முழுவதும் எல்.இ.டி விளக்குகள், கொடைக்கானல் ஏரி தூர்வாரப்பட்டது, சுற்றுலா மேம்பாடு, பழனி கோயில் ரோப் கார், பழனியை சுற்றி சாலை சீரமைப்பு, வத்தலகுண்டு வைகை கூட்டுக்குடிநீர் திட்டம், கீரனூரில் கூட்டுக்குடிநீர் திட்டம், நிலக்கோட்டை தடுப்பணை, கண்மாய் நீரேற்றம், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் சீரமைப்பு, ஆத்தூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தல் என்று இவ்வளவும் செய்திருக்கிறோம்.
திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாம் கட்டினோம் ஸ்டாலின் திறந்தார், திண்டுக்கல்லில் காய்கறி மார்க்கெட் நாம் கொண்டுவந்தோம், அவர் திறந்தார், வேடசந்தூர் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர், சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டேன், கரூர் மாயனூர் அணையில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் வேடசந்தூர், குஜிலியம்பாறை, வடமதுரை பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கொடுத்தோம். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டது, திமுக ஆட்சியில் கிடப்பில் போட்டனர், மீண்டும் அதிமுக ஆட்சியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
அதிமுக 297 அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம். திமுக ஆட்சியின் வரிச்சுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்தப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்பத் தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாமல் ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். சரியான நேரத்திற்கு பணியிடங்களுக்குச் செல்வதற்கும், படிக்கச் செல்வதற்கும் ஏதுவாக, 5 லட்சம் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்க, தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக 3 சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். பொங்கல் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும்.
பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். ரேஷன் கடையில் கொடுக்கப்படும் அரிசி தரமில்லை என்ற தகவல் வருகிறது. அதனால் நவீன அரிசி ஆலையில் உற்பத்தி செய்து கடையில் கிடைக்கும் அரிசி போன்றே ரேஷன் கடையில் கொடுக்கப்படும். விலையில்லா அரிசி கடை அரிசி போன்று கொடுப்போம். எத்தனையாயிரம் கோடி செலவானாலும் கொடுப்போம். ரேஷன் கடையில் இதுவரை விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு கடனும் தள்ளுபடி செய்யப்படும். புதிதாக 2 லட்சம் ரூபாய் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும்.
பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம், வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். மீனவர்களுக்கும் கான்கிரீட் வீடு. கட்டிடத் தொழிலாளர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் 25 லட்சம் நிவாரணம், படுகாயமடைந்தால் சிகிச்சை செலவை அரசே செலுத்தும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இஸ்லாமிய கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயமாக தொழில் தொடங்கினால் கூட்டுறவு சங்கத்தின் மூலம் தேவையான வட்டியில்லா கடன் வழங்கப்படும். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இங்கே வருகை புரிந்த அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின், அதிமுக வின்னிங், நல்லாட்சி கம்மிங், நன்றி வணக்கம்” என்று முடித்தார்.

Spread the love