சேலத்தில் இன்று தவெக பிரசார கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சரியான நேரத்துக்குள் விஜய் வருகை தந்துள்ளார்.

சேலத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கும் பிரசார பொதுக் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுடன் நடத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தில் விஜயைக் காண ஏராளமானோர் திரண்டிருக்கிறார்கள்.
ஓமலூர் விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக தவெக தலைவர் விஜய் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏராளமான தொண்டர்கள் சாலையில் காத்திருப்பதால் அவர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சரியாக 12.25 மணிக்குள்ளாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜய் வந்தடைந்தார்.
தவெக தலைவா் விஜய்யின் நிா்வாகிகள் சந்திப்பு, தோ்தல் பிரசாரக் கூட்டம், சேலம் சீலநாயக்கன்பட்டி, கேவிபி காா்டன் உள் வளாகத்தில் இன்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் பங்கேற்க சேலம் சென்று கொண்டிருக்கும் விஜயை பார்க்க சாலைகளில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ஓமலூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து சாலை வழியாக விஜய் சென்றடைந்தார்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் விஜயைக் காண தவெகவினர் பலர் அங்கே காத்து நின்றனர். அங்கிருந்த தொண்டர்களை அப்புறப்படுத்திவிட்டு வாகனங்களுக்கு வழி விட போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்டோர் கடும் முயற்சி மேற்கொண்டனர்.
ஓமலூர் விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு வர அரை மணி நேரம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், மிகச் சரியாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார் விஜய்.
ஏற்கனவே, க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு இருப்பவா்களுக்கு மட்டுமே இன்று நடைபெறும் கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனாலும் ஏராளமானோர் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.
முன்னதாக கூட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், காவல் துறையினரினா் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளன. க்யூ ஆா் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 போ் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா்.
நுழைவுச்சீட்டு இல்லாதவா்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டா்களும், மக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாக தவிா்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More Stories
ரூ.5000 வரவுக்கு பிஹார் உதாரணத்தை சுட்டிக் காட்டுவது சரியல்ல: தமிழிசை
தேர்தல் நேரத்தில் ரூ.5000 வரவு வைக்கும் திமுகவின் ‘பேட்ச் ஒர்க்’ வேலையை மகளிர் நம்பமாட்டார்கள்: பழனிசாமி
“தவெகவுக்கு பெருகும் மகளிர் ஆதரவே திமுக ரூ.2000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கக் காரணம்” – விஜய்