
சென்னை: சொந்தமாக தொழில்நுட்பத்தை உருவாக்கி, உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்க வேண்டும் என பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச திட்ட மேலாண்மை சங்கம் (ஐபிஎம்ஏ) மற்றும் திட்ட மேலாண்மை அசோசியேட்ஸ் (பிஎம்ஏ) சார்பில் சர்வதேச திட்ட மேலாண்மை நிபுணர்கள் மாநாடு – 2026, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
பிஎம்ஏ தலைவரும், பிரம்மோஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநருமான சிவதாணுபிள்ளை, இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், ‘இந்து’ என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட சர்வதேச நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் ஒன்றிணைந்து ‘செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை மூலம் உலகளாவிய மாற்றத்தை உருவாக்குதல்’ என்ற தலைப்பில் விவாதித்தனர்.
ஐபிஎம்ஏ தலைவர் மிலடன் வுகோமனோவிக் தலைமை தாங்கினார். முன்னதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, “திட்டங்களை தீட்டுவதைவிட அவற்றை சரியாக செயல்படுத்துவதே இந்தியாவின் முக்கிய சவால்.
இந்த இடைவெளியை குறைக்க திட்ட மேலாண்மை ஒரு பாலமாக அமைய வேண்டும். ஏஐ மற்றும் துல்லியமான தரவுத்தளங்கள் மூலம் அரசுத் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல முடியும்” என்றார்.
சிவதாணு பிள்ளை பேசும்போது, “2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையான வளர்ந்த நாடாக மாற்ற, திட்ட மேலாண்மை இன்றியமையாதது. காலநிலை மாற்றம், எரிசக்திபோன்ற பெரிய சவால்களை சமாளிக்க இலக்கு சார்ந்த மேலாண்மை முறை தேவை.
இந்தியா மற்ற நாடுகளின் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை விடுத்து, சொந்தமாக உருவாக்கி உலக நாடுகளுக்கு தலைமை வகிக்க வேண்டும்” என்றார். இந்நிகழ்வில் ஐபிஎம்ஏ நிதி மற்றும் செயல்பாட்டு துணை தலைவர் விளாடிமிர் ஒப்ராடோவிக், ஐபிஎம்ஏ முதன்மைச் செயல் அதிகாரி லாரா லசைட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் சரத் பவார்!
முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் லேண்ட் ஆகி திறந்துவைத்த மோடி!