August 5, 2026

டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் செயல்படும் கடைகளுக்கு உடனே டெண்டர் விட கோரிக்கை

குன்னூர் : ​​நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் லாம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இதில் பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட டால்பின் நோஸ் பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 12 கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த கடைகளுக்கான டெண்டர் காலம் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்திலேயே நிறைவடைந்தது. இருப்பினும், புதிய டெண்டர் விடப்படாமல், பழைய வியாபாரிகளுக்கே தொடர்ந்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.

​இந்நிலையில், வழக்கப்பட்டிருந்த கால அவகாசமும் கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முழுமையாக நிறைவடைந்தது. இதையடுத்து, கடைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று பர்லியார் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், காலக்கெடு முடிந்தும் வியாபாரிகள் இதுவரை கடைகளை காலி செய்யாமல் தொடர்ந்து நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ​டால்பின் நோஸ் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் பல்வேறு அரசியல் செல்வாக்கு மற்றும் முக்கிய புள்ளிகளின் பின்னணியிலேயே டெண்டர் எடுக்கப்பட்டு நடத்தத்தி வருவதாக அப்பகுதியில் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

​இந்த சூழ்நிலையில், டால்பின் நோஸ் அருகிலுள்ள சேம்பக்கரை பழங்குடியின கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், கட்சி பாகுபாடு ஏதுமின்றி, தற்போது வரை முறையான டெண்டர் இன்றி இயங்கி வரும் கடைகளுக்கு உடனடியாக வெளிப்படையான முறையில் புதிய டெண்டர் விட வேண்டும்.

மேலும், அப்பகுதியில் காலம் காலமாக வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களாகிய எங்களுக்கு கடைகள் ஒதுக்கீட்டில் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டும் எனச சேம்பக்கரை கிராம மக்கள் அரசுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love