கொழும்பு: இலங்கையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டிட்வா புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், பெரும் சேதமும் ஏற்பட்டது. ஏற்கெனவே, பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், டிட்வா புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து உலக நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரியது. இதனிடையே, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில், இந்திய அரசு ‘ஆபரேஷன் சாகர் பந்த்’ என்ற திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை செய்தது.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றார். அவர், இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்கவையும் சந்தித்தார்.
இதையடுத்து, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4,050 கோடி நிதியுதவியை இந்திய அரசு அறிவித்தது. இந்தியா வழங்கும் இந்த நிதியுதவியில் 3,150 கோடி ரூபாய் சலுகை கடன் என்றும், 900 கோடி ரூபாய் மானியமாகும்.
இந்நிலையில், டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, உட்கட்டமைப்பு, தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் போன்ற அத்தியாவசியத் துறைகளின் சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

More Stories
ஃபிளை துபாய்’ விமானத்தை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல்
அமெரிக்கா, ஜெர்மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
ரஷ்ய பிளேக் தடுப்பு ஆய்வக ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு: தீவிர கண்காணிப்பில் 200+ பேர்