August 7, 2026

டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்.27 வரை மிதமான மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு சத்தீஸ்கர் முதல் குமரிக் கடல் வரை தெலங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (ஏப்.22) லேசானது முதல் மிதமான மழையும், ஏப்.23 முதல் 25ம் தேதி வரை லேசான மழையும், ஏப்.26, 27 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஏப்.22ம் தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உள் தமிழக மாவட்டங்களில் நாளை (ஏப்.22) முதல் 25ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஏப்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்ப நிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 4 செ.மீ மழை, சிவலோகத்தில் 2 செ.மீ மழை, திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, ஈரோடு மாவட்டம் தாளவாடி ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Spread the love