May 4, 2026

ட்ரம்ப்பின் அறிவிப்பும் சர்வதேச சந்தையின் சந்தேகங்களும்..!

சர்​வ​தேச வர்த்தக விதி​களை​யும், ராஜதந்​திர உறவு​களை​யும் அமெரிக்கா​வுக்கே முதலிடம் (America First) என்ற தனது தனிப்​பட்ட கொள்​கை​யின் மூலம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அடியோடு மாற்றி எழுதி வரு​கிறார்.

2026ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் அவர் விதித்த அதிரடி வர்த்தக வரி​களும், ஈரான் தொடர்​பான போர் பதற்ற அறி​விப்​பு​களும் உலகப் பங்​குச் சந்​தைகளில் முன்​னெப்​போதும் இல்​லாத வகையில் கடும் ஏற்​றத்​தாழ்​வு​களை உரு​வாக்​கி​யுள்​ளன.

இந்​தச் சூழலில், அமெரிக்​கா​வின் பிடியி​ல் இருந்து நழுவி வரும் உலகத் தலை​மைப் பொறுப்பை சீனா ஏற்க வேண்​டும் என்ற ஸ்பெ​யினின் பகிரங்​கக் கோரிக்​கை, புதிய புவி​சார் அரசி​யல் மாற்​றத்​திற்​கும் வலு​வான அறை​கூவலுக்​கும் வித்​திட்​டுள்​ளது.

அமெரிக்க உச்ச நீதி​மன்​றத்​தின் சில கட்​டுப்​பாடு​களுக்​குப் பிறகு, 2026 பிப்​ர​வரி​யில் இறக்​குமதி பொருட்​களுக்கு 10 % முதல் 15 % வரை ட்ரம்ப் நிர்​வாகம் அதிரடி வரி விதித்​தது. இந்த அறி​விப்பு மட்டுமின்றி ஈரான் போர் தொடர்​பான பல்​வேறு அறி​விப்​பு​கள் பெரும்​பாலும் வெள்​ளிக்​கிழமை சந்தை முடி​யும் நேரத்​திலோ அல்லது வார இறுதி நாட்​களிலோ வெளி​யா​வது பெரும் சர்ச்சையை கிளப்​பி​யுள்​ளது.

இது​போன்ற அறி​விப்​பு​கள் ட்ரம்ப் நிர்​வாகம் தனது அதிகாரத்தைப் பயன்​படுத்​தித் தனக்கு நெருக்​க​மானவர்​களுக்கு சாதக​மாக செயல்​படு​கிறது எனற குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளதுடன் சாதாரண முதலீட்​டாளர்​களின் நம்​பிக்​கை​யைச் சிதைப்​ப​தாக உள்​ளது என பொருளா​தார வல்​லுநர்​கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சந்தை விடு​முறை நாட்​களில் வெளி​யிடப்​படும் இந்த அறி​விப்​பு​களின் தாக்​கம் குறித்து முன்​கூட்​டியே தெரிந்த ‘உள்​வட்​டாரங்​கள்’ (Insiders), திங்​கட்​கிழமை சந்தை மீண்​டும் திறக்​கும்​போது பல மில்லியன் டாலர் லாபத்தை ஈட்​டிய​தாக புகார் எழுந்​துள்​ளது.

உதா​ரண​மாக, கடந்த பிப்​ர​வரி 23 திங்​கட்​கிழமை அன்​று, அமெரிக்​கப் பங்​குச் சந்​தைகளான எஸ்​&பி 500 மற்​றும் நாஸ்​டாக் ஆகியவை கடும் சரிவைச் சந்​தித்​தன. இந்த வீழ்ச்​சியை முன்கூட்டியே கணித்து ‘ஷார்ட் செல்​லிங்’ செய்த ட்ரம்ப் ஆதரவு நிறுவனங்கள், சுமார் 80 மில்​லியன் முதல் 120 மில்​லியன் டாலர் வரை லாபம் பார்த்​த​தாக அமெரிக்க காங்​கிரஸ் உறுப்​பினர் ரிச்சிடோரஸ் தாக்​கல் செய்த அறிக்கை அதிர​வைக்​கிறது.

ஈரான் மீதான தாக்​குதல் மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்தி முற்​றுகை தொடர்​பான ட்ரம்ப்​பின் அறி​விப்​பு​கள் சர்​வ​தேச எரிசக்தி சந்தையை நிலைகுலை​யச் செய்​துள்​ளன. ஏப்​ரல் 7-ம் தேதி ட்ரம்ப் விடுத்த எச்​சரிக்​கை​யைத் தொடர்ந்​து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 8.3% உயர்ந்​தது. வியப்​புக்​குரிய வகை​யில், இந்த அறி​விப்​புக்​குச் சில நிமிடங்​களுக்கு முன்​பாகவே சுமார் 2.4 பில்​லியன் டாலர் மதிப்​பிலான எண்​ணெய் ஒப்பந்தங்கள் வர்த்​தகம் செய்​யப்​பட்​டது சந்​தேகத்தை மேலும் அதி​கரித்​துள்​ளது.

இது குறித்து விசா​ரிக்க முற்​பட்ட பங்​குச் சந்தை ஒழுங்​கு​முறை அமைப்​பு​களை, நிர்​வாக அதி​காரத்​தைப் பயன்​படுத்தி ட்ரம்ப் முடக்​கு​வ​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​துள்​ளன. கிரிப்​டோ கரன்சி மற்​றும் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் மீதான பல முக்​கிய​மான அமலாக்க நடவடிக்​கைகள் நிறுத்​தப்​பட்​டுள்ளன அல்​லது கைவிடப்​பட்​டுள்​ளன. இது பிடிக்​காமலேயே நேர்​மை​யான அதிகாரி​யாகக் கருதப்​பட்ட எஸ்​இசி அமலாக்​கப் பிரிவு இயக்​குநர் மார்​கரெட் ஆர். ரையான் கடந்த மார்ச் 16-ல் திடீரென ராஜி​நாமா செய்​த​தாக​வும் கூறப்​படு​கிறது.

செனட்​டர் எலிசபெத் வாரன் மேக்​சின் வாட்​டர்ஸ் போன்ற முக்கியத் தலை​வர்​கள், இந்த ராஜி​நாமா குறித்து விரி​வான அறிக்கை கேட்டு எஸ்​இசி தலை​வர் பால் அட்​கின்​ஸுக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர். இந்த விவ​காரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்​தில் கடும் விவாதங்​கள் நடந்து வரு​கின்​றன.

நாட்​டின் உச்ச அதி​கார மையங்​களு​டன் தொடர்​புடைய​வர்​கள் ஈட்​டும் ஒவ்​வொரு பில்​லியன் டாலர் லாப​மும், கோடிக்​ கணக்​கான சாமானிய மக்​களின் உழைப்​பிலிருந்து பிடுங்​கப்​படும் ஒரு மறை​முக​மான வரி​யாகவே பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​கா​வின் இந்த கண்​ணி​யமற்ற கணிக்க முடி​யாத போக்கினால் அதிருப்​தி​யடைந்​துள்ள பல ஐரோப்​பிய நாடு​கள், தற்​போது ஆசி​யா​வின் பக்​கம் திரும்​பத் தொடங்​கி​யுள்​ளன. சமீபத்தில் பெய்​ஜிங்​குக்​குப் பயணம் மேற்​கொண்ட ஸ்பெ​யின் பிரதமர் பெட்ரோ சான்​செஸ், அமெரிக்கா விட்​டுச் சென்ற தலைமைத்​துவ வெற்​றிடத்தை சீனா நிரப்ப வேண்​டும் என்று பகிரங்​க​மாகவே அழைப்பு விடுத்​தது சர்​வ​தேச அரசி​யலில் ஒரு மைல்​ கல்​லாகப் பார்க்​கப்​படு​கிறது.

அதற்கு ஏது​வாக, நேட்டோ அமைப்​பில் உள்ள ஒரு முக்​கிய நாடான ஸ்பெ​யின், சீனா​வுடன் 5 பில்​லியன் டாலர் மதிப்​பிலான புதிய பசுமை ஆற்​றல் ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திட்​டுள்​ளது. இது அமெரிக்க டாலரின் வலிமை​யைக் குறைக்​கும் ஒரு தற்​காப்பு நடவடிக்​கை​யாகவே வல்​லுநர்​களால் கருதப்​படு​கிறது.

2026ம் ஆண்டு என்​பது உலக வல்​லரசு வரிசை​யில் ஒரு பெரிய இடமாற்​றத்தை ஏற்​படுத்​தும் ஆண்​டாக அமை​யும் என்​பது சர்வதேச வல்​லுநர்​களின் கணிப்​பாக உள்​ளது. நிலை​யான, கணிக்​கக்​கூடிய ஒரு பொருளா​தா​ரத் தலை​மையை நோக்​கிய உலக நாடு​களின்​ தேடல்​ அதி​கரித்​துள்​ளது. அது சீனாவை உலக அரங்​கில்​ முன்​னிறுத்​து​வ​தாக அமை​யு​மா என்​ற எதிர்​பார்​ப்​பும்​ எழுந்​துள்​ளது.

Spread the love