
தருமபுரி: செலவினங்கள் ஏறுமுகத்திலும், விலையில் மட்டும் எப்போதும் ஏற்ற, இறக்கம் நிலவுவதாகவும் தக்காளி சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், தருமபுரி உட்பட மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஆண்டுமுழுவதும் பரவலாக தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தருமபுரி மாவட்டம், கூடுதல் வெப்ப மண்டல பகுதியாக இருப்பதால் இங்கு சாகுபடியாகும் தக்காளி தனித்துவமான புளிப்பு சுவையை கொண்டுள்ளது.
இங்கு சாகுபடியாகும் தக்காளி பழங்கள் உழவர் சந்தைகள், சில்லறை விற்பனைக் கடைகளுக்கு மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் உழவர் சந்தைகளில் தக்காளியின் விலை கிலோ ரூ.45 வரை விற்பனையானது. ஜனவரி மாதத்தில் சற்றே குறைந்தபோதும் சராசரியாக கிலோ ரூ.30 வரை விற்பனையானது.
Read More
ஆனால், ஜனவரி இறுதியில் கிலோ ரூ.15 ஆகக் குறைந்த தக்காளி விலை கடந்த 2 நாட்களாக கிலோ ரூ.10 என்ற விலைக்கு சரிந்துள்ளது. இதனால் தக்காளி சாகுபடி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாலக்கோடு அருகே புலிகரை பகுதியைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் சிலர் கூறியதாவது: உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 என்ற விலைக்கு விற்பனையாகும்போது, வயலில் விவசாயிகளிடம் மொத்தமாக தக்காளியை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் இன்னும் குறைவான விலையையே அளிக்கிறார்கள்.
இன்றைய சூழலில் வயல் உழவில் தொடங்கி தொழு உரமிடுதல், பார் அமைத்தல், நாற்று செலவு, நடவு செலவு, பராமரிப்பு, களையெடுத்தல், கூலியாட் களுக்கு நாளொன்றுக்கான கூலி ஆகியவற்றை கணக்கீடு செய்து பார்த்தால் கிலோவுக்கு ரூ.10-க்கும் குறைவான விலை என்பது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
விளைச்சல் அதிகரிக்கும் தருணங்களில் இதுபோன்ற விலைச்சரிவு தவிர்க்க முடியாதது என விவசாயிகளுக்கு காலம்காலமாக பொதுவான அறிவுரை வழங்கப்படுகிறது. நடவில் தொடங்கி அறுவடை வரை தக்காளி சாகுபடியின் எந்த நிலையிலும் ஆகும் செலவினங்களில் எப்போதுமே ஏற்ற, இறக்கம் நிலவியதில்லை.
செலவினங்கள் ஆண்டுக்கு ஆண்டு ஏறுமுகமாக மட்டுமே உள்ளது. ஆனால், தக்காளிக்கான விலை மட்டும் ஏற்ற, இறக்கத்திலேயே நிலவி வருகிறது எனவே, தக்காளிக்கு ஆதார விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பொருத்தமான இடங்களை தேர்வு செய்து அரசு சார்பில் தக்காளியை மதிப்புக்கூட்டு பொருளாக்கும் ஆலைகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

More Stories
ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்
“ரூ.1500 கோடி லஞ்சம்… மனமகிழ் மன்ற உரிமம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை” – அன்புமணி
கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணி: அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு