புதுடெல்லி: மேற்காசிய போர் காரணமாக எரிபொருள் சிக்கனம், தங்கம் வாங்குவதை குறைத்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 135-வது பகுதி நேற்று ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளதாவது: உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மேற்காசியப் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் அளித்து வரும் பேராதரவு பெரிதும் பாராட்டுக்குரியது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டே, தங்கம் வாங்கு வதைத் தவிர்க்குமாறும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். எனது இந்த அழைப்பை ஏற்று, முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
தினமும் ஒரே திசையில், ஒரே பகுதிக்குத் தங்களின் தனித்தனி வாகனங்களில் சென்று வந்தவர்கள், இப்போது ஒன்றிணைந்து ஒரே வாகனத்தில் பயணிக்கும் நல்ல பழக்கத்தைத் தொடங்கியுள்ளனர். இது எரிபொருள் சேமிப்புக்கு வித்திட்டுள்ளது. அதேபோன்று, பல குடும்பங்கள் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்குக் கூடப் புதிதாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்த்துள்ளனர். அவசரத் தேவைக்கு, தங்களின் பழைய நகைகளையே புதிய வடிவமைப்பில் மாற்ற தொடங்கியுள்ளனர்.
மக்களின் பங்களிப்பும் பொருளாதார மாற்றமும் குறித்து தங்களின் அனுபவங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஜூன் மாதத்தில் தான் விமானத்துறையிலும் கூட, தேசம் பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. சி-295 என்ற இந்த விமானம் முழுவதுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது, மேலும் இந்த சி-295 விமானம் தனது முதல் வான் பயணத்தை நிறைவு செய்திருக்கிறது.
இப்படி 40 விமானங்கள் பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் சிறுகுறுநடுத்தரத் தொழில்துறை மற்றும் வான்வெளித்துறைக்கு புதிய சக்தி கிடைத்திருக்கிறது. வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவப்படும் திருவுருவச் சிலைகள் நமது தேசத்தின் மண்ணால் உருவாக்கப்பட்டவையாக, நமதுமண்பாண்டம் தயாரிப்போரால், உள்ளூர் கைவினைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பேரிஸால் தயாரிக்கப்பட்ட திருவுருவச் சிலைகளைக் கண்டிப்பாக மக்கள் வாங்க வேண்டாம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

More Stories
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை ஈர்க்க ரூ.14 கோடி வரை உதவித் தொகை
‘ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தால் அயோத்திக்கு பக்தர்கள் வருகை, காணிக்கை குறைந்தது’
“காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் நியாயமற்றது” – சோனியா காந்தி