April 2, 2026

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.1) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தங்கம் விலை அன்றாடம் பல புதிய வரலாற்று உச்சங்களைத் தொட்டது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் பாதியில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1.25 லட்சத்தை தாண்டி விற்பனையானது. இதன்பிறகு தங்கம் விலை சரிவதும், பின்னர் ஏறுவதுமாக இருந்தது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்தநாள் மார்ச் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,26,200 என்ற அளவில் இருந்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டது.

மத்திய ஆசிய போரின் காரணமாக, கச்சா எண்ணெய் விலை ஏற, கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடைபெறுவதால், டாலர் மதிப்பு உயர்ந்தது. இதனால் தங்கம் விலை குறைந்து வந்தது. அவ்வப்போது சிறிய ஏற்றமும், பின்னர் குறைவதாகவும் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று (புதன் கிழமை) கிராமுக்கு ரூ.380 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.14,050-க்கும், பவுனுக்கு ரூ.3,040 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் வர்த்தக நாளில் தங்கம், வெள்ளி விலை ஏற்றம் கண்டுள்ளது.

சென்னையில் இன்று தங்கத்தை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.15 அதிகரித்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.

Spread the love