March 24, 2026

தங்கம் விலை மீண்டும் அதிரடி வீழ்ச்சி – பவுனுக்கு ரூ.5,360 குறைவு!

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 23) பவுனுக்கு ரூ.5,360 குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்துள்ளது.

ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. எதிர்கால எரிபொருள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், டாலர் பயன்பாடு அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை சரிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதோடு, இந்தியாவிலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 20ம் தேதி வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.692 ஆக இருந்த நிலையில், இன்று (மார்ச் 23) அது 93.954 ஆக உயர்ந்து வர்த்கமாகி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் 91.585 ஆக இருந்த ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 20 நாட்களில் இரண்டு முறை மட்டுமே ஏற்றம் கண்டது. மற்றபடி அது தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக, தங்கத்தின் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கும், பவுனுக்கு ரூ.5,360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,03,600-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.5,848 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,13,016-க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,35,000-க்கு விற்பனை ஆகிறது.

Spread the love