April 2, 2026

தமிழகத்தில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட போகும் வேட்பாளர்கள் யார்.. இன்று இறுதியாகும் பட்டியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனிடையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் துவங்கிவிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து கொண்டிருக்கிறது.

சட்டமன்ற தேர்தல் அறிவித்ததும் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு குழு அமைத்த காங்கிரஸ், திமுக இன்னமும் குழு அமைக்காமல் உள்ளது என குற்றம்சாட்டியது. முதல் ஆளாக குழு அமைத்து, கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காமல் உள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பை அகில இந்திய தலைமை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு 28 சீட்டுகள்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இந்த முறை தங்களுக்கு 35 சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கு திமுக தலைமை ஒப்புக்கொள்ளாத நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலையீடு காரணமாக 28 இடங்களுடன் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடந்த முறை 25 சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த தடவை கூடுதலாக மூன்று தொகுதிகள் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது.

  

eதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அதனுடன் ஒரு ராஜ்ய சபா சீட்டும் காங்கிரஸ் பெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதிலும் இழுபறி ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு வழியாக கடந்த 28 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
அதன்படி ஈரோடு கிழக்கு, கடலூர், அறந்தாங்கி, சிவகாசி, மயிலாடுதுறை, காரைக்குடி, திருவாடனை, உதகமண்டலம், சோளிங்கர், கிள்ளியூர், வேளச்சேரி, பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், உசிலம்பட்டி, கிருஷணகிரி, குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், விளவங்கோடு, மேலூர், கவுண்டம்பாளையம், பொன்னேரி, ஆத்தூர், ஊத்தங்கரை, துறையூர், மேலூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலுக்கு பின் அதிமுக என்ற கட்சியே இருக்காதா.. நிர்மல் குமார் என்ன பண்ண போறாரு பாருங்க.. ராஜேந்திர பாலாஜி பதிலடி
வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. அதிலும் இழுபறிகள் நீடித்த நிலையில், சமீபத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை பார்த்து கடும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டது. அதோடு பட்டியலில் சில மாற்றங்கள் செய்ய சொல்லியும் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

மத்திய தேர்தல் குழு கூட்டம்
இந்நிலையில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று இரவு எட்டு மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதனையடுத்து இன்று மாலைக்குள் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை ராகுல் காந்தி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்
தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் வேட்புமனுத் தாக்கல் செய்து பிரச்சாரத்தை துவங்கி விட்டனர். அதே நேரம் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இன்னமும் வேட்பாளர்கள் பட்டியலையே வெளியிடாமல் இருக்கிறது. இரண்டு கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love