July 15, 2026

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக லயோலா மணி நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணியை அரசு நியமித்துள்ளது. அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள். அவரது நியமனம் தொடர்பான இதர விதிமுறைகள் தனியாக வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

லயோலா மணிக்கு பணி நியமன ஆணையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் இன்று வழங்கினார். அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடன் இருந்தார். பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லயோலா மணி, தவெக பேச்சாளர், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கும் பணியை தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்பனையும் செய்து வருகிறது.

கடந்த திமுக ஆட்சியின்போது, ஆசிரியரும், பட்டிமன்றப் பேச்சாளரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, பாடநூல் கழகத்தின் தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடநூல் கழகத்துக்கு புதிய தலைவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Spread the love