பெங்களூரு: வரும் செப்டம்பர் 12-ம் தேதி 34-வது பட்டமளிப்பு விழா நடைபெறும் என பெங்களூரு தேசிய தேசிய சட்டப் பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அறிவித்திருந்தது.
இவ்விழாவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோரை அழைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் திட்டமிட்டபடி விழாவை நடத்த முடியவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
முன்னதாக, ஹைதராபாத் சட்டப் பல்கலைக்கழகத்தில் தலைமை நீதிபதி பங்கேற்பதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய பார் கவுன்சில், 2026-ம் ஆண்டில் சட்டப் படிப்பை முடிக்கும் பட்டதாரிகளை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக் கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டது. ஆனால், பின்னர் அந்த உத்தரவை பார் கவுன்சில் திரும்பப் பெற்றுக்கொண்டது. அத்துடன், பார் கவுன்சில் தலைவரான மனன் குமார் மிஸ்ரா மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
விழா ரத்தானாலும், பட்டம் பெறும் மாணவர்களுக்கு இது எந்த வகையிலும் இடையூறாக அமையாது என பல்கலைக்கழகம் உறுதியளித்துள்ளது. நிர்வாகக் குழுக்களின் தேவையான ஒப்புதலுக்கு உட்பட்டு, பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி விழா இல்லாமலேயே பட்டங்கள் வழங்கப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களைக் கூரியர் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் வந்தோ பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

More Stories
நடைபாதை கடை என்பதற்காக இழப்பீட்டை குறைக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு
37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் நேபாளம் சென்றது இந்தியாவின் 2வது விமானம்