
சென்னை: “கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 வழங்க, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்துக்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே. திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்.
இப்போதுகூடப் பாருங்கள். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் ஆகப்பெரும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா? இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.
அதுமட்டுமா? திமுக. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் தவெகவைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
எனவே, என்னருமைத் தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜய்யின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி. திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
சேலத்தில் இன்று தவெக பிரசார கூட்டம்! சரியான நேரத்துக்குள் வந்த விஜய்
ரூ.5000 வரவுக்கு பிஹார் உதாரணத்தை சுட்டிக் காட்டுவது சரியல்ல: தமிழிசை
தேர்தல் நேரத்தில் ரூ.5000 வரவு வைக்கும் திமுகவின் ‘பேட்ச் ஒர்க்’ வேலையை மகளிர் நம்பமாட்டார்கள்: பழனிசாமி