February 9, 2026

தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை இன்று காலை திருவள்ளூர் அருகே போளிவாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல் கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்க விழா மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை திருவள்ளூர் அருகே போளிவாக்கத்தில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி, திருமழிசை பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு விநியோகம் செய்யும் வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கியும்,மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1, 29,689 தூய்மை பணியாளர்கள் பயன் பெற உள்ளனர். இத்திட்டத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.213.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கும் திட்டம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை, பணியின் போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன், எம் எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், சுதர்சனம், துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Spread the love