July 15, 2026

“தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்பதை ஆளுநர் உணர வேண்டும்” – மாணிக்கம் தாகூர்

சென்னை: ஆர்எஸ்எஸ்ன் வெறுப்பு அரசியலை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ‘தேசிய கல்விக் கொள்கை என்பது காலனித்துவ சிந்தனையில் இருந்து, இந்திய கல்வியை விடுவிக்கும் முயற்சி. இதில் திருத்தங்கள் கோரலாம். செயல்படுத்தாமல் இருப்பது சரியல்ல” என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, ‘பாரம்பரிய குருகுலக் கல்வி முறையை செயல்படுத்த முடியவில்லை” என தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், நேரு காலம் முதல் காங்கிரஸ் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட கல்வி முறையை சிதைத்து, சின்னாபின்னமாக்கி வருகிறது. ஆர்எஸ்எஸ்ன் வெறுப்பு அரசியலை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை ஆளுநர் உணர வேண்டும்.

‘அனைவருக்கும் கல்வி” என்பதே காங்கிரஸ் அரசின் நோக்கமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில், ‘தகுதி, தரம், தேசியம், தேசபக்தி” என்ற பெயரில் ஒருசாராருக்கு மட்டுமே கல்வியை சொந்தமாக்க நினைக்கிறது. ‘பாகுபாடும், பாசிசமும்” பாஜகவின் அடிப்படை கொள்கையாக இருப்பதே இதற்கு காரணம்.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. மாநில அரசுகள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. ஆனால், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வெறுப்பையும் அடிப்படைவாதத்தையும் திணிக்கும் நோக்கில் பாஜக தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது.

இதை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என ஆளுநர் அர்லேகர் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் மூக்கை நுழைப்பதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆளுநர் என்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகளைத் தான் பேச வேண்டும்.

முந்தைய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட்டு உச்ச நீதிமன்றம் வரை ‘குட்டு” வாங்கியவர். அதிலிருந்து பாடம் கற்காமல் ஆர்.என்.ரவி காட்டிய பாதையிலேயே அர்லேகரும் செல்வது சரியல்ல.

அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துவது, சந்தடி சாக்கில் தேசிய கல்விக் கொள்கையை திணிக்கப் பார்ப்பது போன்ற ‘அதிகார அத்துமீறல்களை” ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டிற்கு எந்த கல்விக் கொள்கை தேவையோ அதை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ளும்.

அதுபற்றி ஆளுநரும், தமிழ்நாடு மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பாஜகவும் கவலைப்படத் தேவையில்லை. குருகுல கல்வி என்பது வர்ணாசிரம தர்மத்தின் ஓர் அங்கம். அதை வலியுறுத்தி ஆளுநர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love