February 15, 2026

நாங்கள் கேட்பது திமுக தோல்வியடைந்த இடங்களைத்தான்: மாணிக்கம் தாகூர்

நாங்கள் கேட்பது திமுக தோல்வியடைந்த இடங்களைத்தான் என்று மாணிக்கம் தாகூர் பதிவு

மாணிக்கம் தாகூர் - முதல்வர் ஸ்டாலின்.

மாணிக்கம் தாகூர் – முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: கடந்த பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிட்டு தோல்வியடைந்த இடங்களைத்தான் நாங்கள் கேட்கிறோம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு போன்ற சலசலப்புகள் ஓங்கி ஒலித்து வருகிறது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், தமிழக பேரவைத் தேர்தலில் திமுக 160 – 170 தொகுதிகளில் போட்டியிட்டு, 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று பேசியிருந்தார். இந்த பேச்சை மேற்கோள்காட்டி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இன்று ஒரு எக்ஸ் பதிவை இட்டுள்ளார்.

அதில், 2021 -ல் 173-ல் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வெற்றி.. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான்.

அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த வாரம் தொடக்கம் முதலே இந்த ஆட்சியில் பங்குக்கான கோரல்களும் மறுப்புகளும் அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன.

சென்னையில் ஒரு சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது. காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும் என்று பேசியிருந்தார். இது ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அமைந்திருந்தது.

ஆனால், கூட்டணி ஆட்சி குறித்து தமிழக முதல்வர் பேசிய செய்தி வெளியான சிறிது நேரத்திலேயே அவரது கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா, அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு” என்று பதிவிட்டிருந்தார்.

அதாவது, கடந்த 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், 96 இடங்களில் திமுகவும் 34 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. அப்போது திமுக பெரும்பான்மை பெறாததை சுட்டிக்காட்டி, அப்போதே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியிருக்க வேண்டும் என்பதைத்தான், 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நமது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தவறு என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் பிப். 11-ஆம் தேதி நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக-காங்கிரஸ் உறவு மற்றவர்கள் நினைப்பது போன்று இல்லை; நாங்கள் நன்றாக இருக்கிறோம். ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும்; அவர்களுக்கும் தெரியும். இது இடையில் சிலர் கிளப்பிவிடும் பிரச்னை, கூட்டணியில் ஏதேனும் முறிவு ஏற்படுமா எனத் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை; ராகுலும் கவலைப்படவில்லை” என்றார்.

உடனடியாக இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என்று நேரடியாகவேக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் இன்று மீண்டும் மாணிக்கம் தாகூர் தன்னுடைய எக்ஸ் பதிவில், அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Spread the love