April 9, 2026

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்துக்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. ரம்ஜான் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் மலை மேல் சென்று வழிபட அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

இதனால் திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்களை அனுமதிக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மலைக்கு செல்லவிடாமல் இந்துக்களை தடுக்கும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘நாட்டில் திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்சினையே இல்லையா? திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள்? நீதிமன்றத்துக்கு வேறு வேலையில்லையா? இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க மனுதாரர் ரூ.10 லட்சத்தை கோயில் கணக்கில் வைப்பு நீதியாக செலுத்த வேண்டும். அப்படி பணம் செலுத்தினால் விசாரணைக்கு எடுக்கப்படும்’ என்றனர்.

மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் ஆஜராகி, ‘மனுதாரர் இதே வேலையாக தான் இருக்கிறார். இதனால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பீடு ஏற்படுகிறது. மாநில அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், மத்திய அரசின் வழக்கறிஞர் கட்டணம் என மனுதாரரின் வழக்குக்காக மட்டும் பல லட்ச ரூபாய் செலவிடப்படுகிறது. எனவே இந்த மனுவை சாதாரணமாக தள்ளுபடி செய்தால் மீண்டும் மீண்டும் இதே கோரிக்கையுடன் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. எனவே அதிகபட்ச அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் வாதிடுகையில், ‘மனுதாரர் இதே வேலையாகவே உள்ளார். இதே போன்ற கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியாகியுள்ளது. எனவே மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

இதையடுத்து, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘அபராதத் தொகையை எங்களால் கட்ட முடியாது. இனிமேல் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்யமாட்டோம். அபராதம் விதிக்க வேண்டாம்’ என்றார். இதற்கு மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகள், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கூறினர். இதற்கு மனுதாரர் தரப்பில், இந்தத் தொகையும் மனுதாரரால் கட்ட முடியாது. நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும். மனுவை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

தொடர்ந்து நீதிபதிகள், ‘மனுதாரர் ஊடகங்களில் தனது பெயர் வர வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று மனுக்களை தொடர்ந்து தாக்கல் செய்வது தெரிய வருகிறது.

இனிமேல் இதுபோன்ற தேவையற்ற மனுக்களை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய மாட்டேன் என அவர் நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்தால் அபராதத்தை திரும்ப பெறவது குறித்து பரிசீலிக்கப்படும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

Spread the love