September 5, 2026

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழப்பு 1,344 ஆக அதிகரிப்பு

காத்மாண்டு: நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேபாளம் – திபெத் எல்லையில் பனிப்பாறைகள் சரிந்ததால் ஏற்பட்ட தீடீர் வெள்ளம் நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியது. குறிப்பாக போட்டேகோஷி ஆற்றில் பெருக்கெடுத்த திடீர் வெள்ளம் கரையோரங்களில் இருந்த பல கிராமங்களையும் நகரங்களையும் அடித்துக்கொண்டு சென்றது. இதில், நேபாள மக்களும், கயிலாய யாத்திரைக்காகச் சென்ற வெளிநாட்டவர்களும் சிக்கிக் கொண்டனர்.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,344 ஆக அதகரித்துள்ளது. இது தொடர்பாக நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை 843 உடல்கள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. இதில், 758 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். 85 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து 501 பேரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுவரை 1030 உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தற்காலிகமாக புதைக்கப்பட்டுள்ளன.

4,898 பேர் காணாமல் போயிருக்கலாம் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணியில் நேபாள ராணுவம் தலைமையிலான பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பேர் உயிருடன் மீட்பு: நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையிலிருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். போட்டேகோஷி ஆற்றுப் பகுதியில் அமைந்திருந்த ஏராளமான நிர்மின் திட்ட சுரங்கப்பாதைகளில் சுமார் 900 பேர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளதை அடுத்து அங்கு மேற்கொள்ளப்ட்ட மீட்புப் பணியின்போது இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட கபீர் மஹர்ஜன் மற்றும் சஞ்சய் ஷா ஆகியோர், உடனடியாக காத்மாண்டுவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஒருவரான சஞ்சய் ஷா, “சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நேரத்தில் நான் மந்திரங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தேன். சுரங்கப்பாதைக்குள் இன்னும் மூன்று அல்லது நான்கு பேர் உயிருடன் இருக்கக்கூடும். ஆழமான பகுதிகளில் இன்னும் கூடுதல் நபர்கள் இருக்கலாம்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love