சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தனித்தனியாக நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளரும், ஆற்காடு தொகுதி எம்எல்ஏவு.மான எஸ்.எம்.சுகுமார் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ.வுமான கே.சி. வீரமணி ஆகியோர் பங்கேற்கவில்லை.
முன்னதாக, தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சுகுமாரிடம் இருந்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, சுமைதாங்கி ஏழுமலைக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் கே.சி.வீரமணியிடமிருந்தும் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு, டாக்டர் பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இவர்களைச் சமாதானப்படுத்தும் நோக்கில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக சுகுமாரும், அமைப்புச் செயலாளராக வீரமணியும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், அவர்கள் அந்தப் பொறுப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படும் நிலையிலேயே, இந்த ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர். எனினும், கே.சி.வீரமணி தற்போது அமெரிக்காவில் இருப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், தவெகவில் இணைந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ரவிக்கு பதிலாக லோகநாதன் நியமிக்கப்பட்டார். இவர்உள்ளிட்ட புதிய மாவட்ட செயலாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையே ஆலோசனை கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் திடீரென பழனிசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, ‘கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒன்றியச் செயலாளர்களைச் சுதந்திரமாகப் பணியாற்ற விடாததே அதிமுக தோல்விக்கு காரணம்.
எனவே, நிர்வாக வசதிக்காகத் திருப்பத்தூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்’ என அவர்கள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அப்போது பழனிசாமி ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக்கூறி அவர்களை சமாதானம் செய்ததாகத் தெரிகிறது

More Stories
“தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்குக” – அன்புமணி
அனைத்துக் கோயில்களிலும் ரகசியமாக ஆய்வு: அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தகவல்
திறன், நேர்மை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு